mk stalin press meet  
தமிழ்நாடு

“மசோதா தோற்கடிக்கப்பட்டால் தமிழகத்தின் பாதுகாப்பை இழந்துவிடுவோம்” - திட்டவட்டமாகக் கூறிய ஸ்டாலின்.. நிலைப்பாட்டில் மாற்றமில்லை!

குறிப்பாக, தென் மாநிலங்களைச் சேர்ந்த மாநிலக் கட்சிகளுக்கு இது வாழ்வா, சாவா என்ற போராட்டம்...

Mahalakshmi Somasundaram

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினர். ஆனால், மசோதா தோற்கடிக்கப்பட்டால் தமிழகத்திற்கான குறைந்தபட்ச பாதுகாப்பைக்கூட இழக்க நேரிடும் என்று விளக்கமளித்த ஸ்டாலின், திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கு எதிராக திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தங்களது எதிர்ப்பையும் கவலைகளையும் வெளிப்படுத்தி வந்தன. இதற்கிடையே, புதிய மசோதாவில் திமுக முன்வைத்த கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அதற்கு ஆதரவு அளிக்க திமுக முடிவு செய்தது. இந்த முடிவு இந்தியா கூட்டணிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியது. 

மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்கக் கூடாது என்றும், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.ஏ.பேபி மற்றும் மூன்று மாநில முதலமைச்சர்கள் இன்று(நவ 29) ஆம் தேதி  மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுகவின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், திமுக ஏற்கனவே எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

மசோதா தோற்கடிக்கப்பட்டால் தமிழகத்திற்கு பாதுகாப்பே இருக்காது!

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் திமுகவின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்ததாகத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, எம்.ஏ.பேபி மற்றும் மூன்று மாநில முதலமைச்சர்கள் இன்று மாலை என்னைச் சந்தித்து தொகுதி மறுவரையறை தொடர்பான தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். நேற்று நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், தொடக்கத்திலிருந்தே நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் புதிய மசோதாவில் இணைக்கப்பட்டிருப்பதையும் அவர்களிடம் எடுத்துக் கூறினேன்.

அவர்கள் எங்களது விளக்கத்தை ஏற்றுக்கொண்டாலும், வேறு சில பிரச்சினைகள் குறித்துப் பேசினர். ஆனால், இப்போது கொண்டுவரப்படும் மசோதா தோற்கடிக்கப்பட்டால் தமிழகத்திற்கான குறைந்தபட்ச பாதுகாப்பைக்கூட இழந்துவிடுவோம் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. 2027ஆம் ஆண்டு ஜனவரியில் அமையவுள்ள தொகுதி மறுவரையறை ஆணையத்தால் தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். இதை யாராலும் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் நிலை அப்படித்தான் உள்ளது. இதை மாற்றுவதற்கான அரசியல் வலிமையோ, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோ நம்மிடம் இல்லை.

1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பதிலாக, அதற்குப் பிறகான எந்தவொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டாலும் தமிழகம் பாதிக்கப்படும். தற்போது உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவமும் வலிமையும் பாதிக்கப்படும். தென் மாநிலங்கள் அனைத்தும் இதனால் பாதிப்பைச் சந்திக்கும். குறிப்பாக, தென் மாநிலங்களைச் சேர்ந்த மாநிலக் கட்சிகளுக்கு இது வாழ்வா, சாவா என்ற போராட்டம். இதைத் தடுக்க இப்போது கொண்டுவரப்படும் மசோதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.

“தமிழகத்தின் அரசியல் வலிமையை அடுத்த 25 ஆண்டுகளுக்குக் காப்பாற்றியுள்ளோம்!”

தொடர்ந்து பேசிய அவர், “இன்று என்னைச் சந்தித்த கட்சிகளிடம் இதற்கு மாற்றாக வேறு எந்தத் திட்டமும் இல்லை. நாடாளுமன்றத்தில் எங்களுக்கு இருக்கும் தற்போதைய பலத்தைப் பயன்படுத்தி அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் அரசியல் வலிமையைக் காப்பாற்றியிருக்கிறோம். இந்த விவகாரத்தில் ஆபத்தான முடிவுகளை எடுக்கவோ, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கவோ எங்களுக்கு வாய்ப்பில்லை. திமுக என்பது பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட கட்சி. அண்ணா தொடங்கி, தலைவர் கலைஞர் வழியாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மாநில உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறோம். அதில் வெற்றியும் பெறுவோம்.

அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் எங்களது நிலைப்பாடு ஒன்றுதான். தமிழ்நாடு FIRST. அவ்வளவுதான்” என்று திட்டவட்டமாகக் கூறினார். தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக இந்தியா கூட்டணித் தலைவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியபோதும், திமுக தனது முடிவில் மாற்றம் செய்ய மறுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.