தமிழ்நாடு

தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள  வலைதளங்கள் மற்றும் மென்பொருட்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள  வலைதளங்கள் மற்றும் மென்பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 

Malaimurasu Seithigal TV

தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள “இ-முன்னேற்றம்” மற்றும் “தகவல் தொழில்நுட்ப நண்பன்” ஆகிய இரண்டு வலைத்தளங்கள், கீழடி- தமிழிணைய விசைப்பலகை மற்றும் தமிழி – தமிழிணைய ஒருங்குறி மாற்றி ஆகிய இரு தமிழ் மென்பொருள்கள் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டன. இதனை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் துவக்கி வைத்தார். 
 
அதன்படி தமிழக மின்னாளுமை முகமையால் உருவாக்கப்பட்டுள்ள ‘இ- முன்னேற்றம்’ என்ற வலைதளம் வாயிலாக 200 முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் பற்றி தகவல்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திட்டம் குறித்த விவரங்கள், பணி ஒப்பந்தமான நாள், தொடங்கப்பட்ட நாள்,  நிதி நிலைமை, மாதாந்திர அடிப்படையில் திட்டத்தின் வளர்ச்சி,  முக்கிய அரசுத் துறைகளின் செயல்பாடுகள், பணி தாமதத்திற்கான காரணங்கள் ஆகியவற்றை ‘இ- முன்னேற்றம் வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்

இதேபோல் தகவல் தொழில்நுட்பவியல் தொழில்கள் குறித்த கருத்துக்கேட்புத் தளமாக “தகவல் தொழில்நுட்ப நண்பன்” என்ற வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இத்தளம் வாயிலாக மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த குழுமங்கள் நேரடியாக  இணைந்து கொள்கைகளை உருவாக்கிட உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட “கணினி விசைப்பலகை” மற்றும் “தமிழிணையம்-ஒருங்குறி மாற்றி” ஆகிய இரு தமிழ் மென்பொருள்களும்  புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அவை “கீழடி- தமிழிணைய விசைப்பலகை” மற்றும் “தமிழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி” எனப் பெயர் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இம்மென்பொருட்களைக் கட்டணமின்றி தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்திட இயலும்.