தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மிக்கு தடையா? மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய முடிவு!

இதில் விளையாடுபவர்கள் தோற்பது போலவே மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Malaimurasu Seithigal TV

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் விபரீதம் தெரியாமலேயே இந்த விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.

ஆன்லை ரம்மி விளையாடும் போது ஆரம்பத்தில் சில வருமானம் ஈட்டுவது போலத் தோன்றினாலும் இதில் விளையாடுபவர்கள் தோற்பது போலவே மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சாதாரண, நடுத்தரக் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பணியாளர்கள், வங்கி அதிகாரிகள், காவல் துறையினர் உள்ளிட்டவர்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் துயர நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்தக் குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க சட்டம் இயற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

-ஜோஸ்