மதுரை திமுக தரப்பில் எம்.எல்.ஏ.க்களை ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை கொடுத்து விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்று வருவதாகவும், இதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம்சாட்டினார். செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணியில் பாமக இணைவது குறித்த கேள்விக்கு, "அதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பேச்சுவார்த்தை நடக்கிறது என்றும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. யூகங்களின் அடிப்படையில் பதில் சொல்ல விரும்பவில்லை" என்றார்.
மதுரையில் கட்சி நிர்வாகிகளுடனான சந்திப்பில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். திருமாவளவன் பேசியதாவது, “சினிமாவில் கதாநாயகன் தோன்றுவது போல திடீரென்று தோன்றி சாதிய வன்கொடுமையை, பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க முடியாது. அதற்கு நீண்ட நெடிய அரசியல்படுத்துதல் தேவை. தேர்தல் நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் ஆட்சி மாற்றம் நிகழ்த்த முடியும்; ஆட்சியை கைப்பற்ற முடியும். ஆனால், கூட்டிக் கழித்து பார்த்தால் சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காது. அரசியல்படுத்துதல் என்பது ஆள் பிடிப்பது அல்ல. பிற கட்சியிலிருந்து ஆள் பிடித்து கொண்டு வந்து தன் கட்சியில் சேர்ப்பது அல்ல. கொள்கை தெரியாதவர்களை 10 லட்சம் பேராக இருந்தாலும் 10 ஆயிரம் பேராக இருந்தாலும் அவர்களை சேர்த்தும் வீண்” என்று குறிப்பிட்டார். திருமாவளவன் அரசியல்படுத்தல் மற்றும் ஆள் பிடிக்கும் வேலை குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "திருமாவளவன் கூறியது திமுகவைத்தான் குறிப்பிட்டிருப்பார். எங்களுடைய எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் திமுக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ரூ.40 கோடி, ரூ.50 கோடி வரை விலை பேசி வருகிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.
மேலும், "இந்த முயற்சிக்காக பயன்படுத்தப்பட்ட நெட்வொர்க்கில் இருந்து ரூ.2 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பல இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் திமுக தலைமை மற்றும் செந்தில் பாலாஜி சார்பில் கொடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும்" என்றார். "எம்.எல்.ஏ.க்களிடம் விலை பேசும்போது, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே நிபந்தனையாக வைக்கப்படுகிறது" என்றும் அவர் கூறினார்.
அனிதா ராதாகிருஷ்ணன், திருச்சி சிவா எப்போது வேண்டுமானாலும் மத்திய அமைச்சர் ஆவார் என்று கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், "அது சாதாரணமான பேச்சு அல்ல. மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்" என்றார். திமுக-அதிமுக இணைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் கூட்டணியில் இருந்து வெளியே வந்தன என்பதை சிந்திக்க வேண்டும். திமுக தனியாக போட்டியிட்டிருந்தால் 20 இடங்கள் கூட வென்றிருக்காது. திமுக எப்போதும் தனியாக 20 சதவீத வாக்குகளை கடந்ததில்லை" என்றார். மேலும், "திமுக மீண்டும் பாஜக அல்லது அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றால் அதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றும் கூறினார்.
"மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்தபடியே மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துவது, பாஜகவுடன் செல்லும் அறிகுறியாகவே தெரிகிறது. பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என செய்திகளும் வெளியாகியுள்ளன. இதற்கு மேல் சுயநல முடிவுகளை திமுக எடுத்தால், அதுவே அந்தக் கட்சியின் கடைசி அத்தியாயமாக இருக்கும்" என அவர் தெரிவித்தார். அதிமுக குறித்து பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி என்ன செய்கிறார் என்பதே தெரியவில்லை. அதிமுக தலைமையை நம்பி யாரும் பயணிக்க மாட்டார்கள். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்த பிறகு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொகுதிக்கே செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அரசியல் எதிர்காலம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்தக் கட்சியில் தொடர முடியாமல் வெளியே வருகிறார்கள்" என்றார்.
"ஆர்.பி. உதயகுமார் ஒரே கட்சியில் ஐந்து விதமான நிலைப்பாடுகளை எடுப்பார். எப்படியாவது எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு பொதுச்செயலாளராக வேண்டும் என்ற முயற்சியில் தான் இருக்கிறார்" என்றும் அமைச்சர் விமர்சித்தார். "நான் கட்சி மாறியது தனிப்பட்ட லாபத்திற்காக இல்லை. திமுகவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடே என்னுடைய பயணம். மக்களால் விரும்பப்படும் தலைமையாக விஜய் உருவெடுத்துள்ளார்" என்றார்.
மின்கட்டணம் அதிகமாக வந்ததாக எழுந்த புகார்கள் குறித்து, "சில இடங்களில் கணக்கீடு எடுப்பதில் சிறிய தவறுகள் ஏற்பட்டுள்ளன. அவை சரிசெய்யப்பட்டு வருகின்றன. மீண்டும் கணக்கீடு செய்யப்படும் போது பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது" என்று விளக்கமளித்தார். அனிதா ராதாகிருஷ்ணன் ஆறு மாதத்தில் ஆட்சி கவிழும் என்று கூறியிருப்பது குறித்து, "பதட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல அவர் பேசி வருகிறார். தென் மாவட்டங்களில் நடந்த பல ரவுடிசம் மற்றும் கொலைச் சம்பவங்களுக்கு அவரது தூண்டுதலே காரணம். அவர் எந்தத் துறையின் அமைச்சராக இருந்தார் என்பதுகூட தெரியாமல் செயல்பட்டார். இப்போதாவது சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.