தமிழ்நாடு

ஏரியின் மதகை உடைத்த மர்ம நபர்கள்..!தண்ணீர் வெளியேறியதால் 300 ஏக்கர் விளைநிலங்கள் நாசம்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஏரியின் மதகை மர்ம நபர்கள் உடைத்ததால் தண்ணீர் வெளியேறி 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன.

Tamil Selvi Selvakumar

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் மர்ம நபர்கள் மீன்பிடிப்பதற்காக ஏரியின் மதகை உடைத்துள்ளனர். இதனால் ஏரியிலிருந்து வெளியேறிய தண்ணீர், 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் சூழ்ந்தது. இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகளும், பொதுமக்களும் மதகை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். ஏரியின் மதகு உடைந்ததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், பாதிப்படைந்தவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் போராட்டத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்தவாசி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.