Madras High Court RSS rally 
தமிழ்நாடு

“மசூதி இருக்கிறது என்பதற்காக.." - RSS பேரணி வழக்கில் நீதிபதி அதிரடி கேள்வி! காரசார விசாரணையில் நடந்தது என்ன?

தமிழ்நாடு முழுவதும் 128 இடங்களில் அணிவகுப்பினை நடத்த அனுமதி கோரிய நிலையில், 58 இடங்களில் அணிவகுப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

Vinvizhi Leninton

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்காக குறிப்பிட்ட பாதையில், ஒரு மசூதி இருப்பதைக் காரணம் காட்டி, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) பேரணிக்கு மாநில காவல்துறை அனுமதி மறுக்க முடியாது என்றும், அவ்வாறு செய்வது முஸ்லிம்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக் 15) குறிப்பிட்டுள்ளது.

"மசூதிகள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களைக் காரணம் காட்டி, ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எப்படி அனுமதி மறுக்க முடியும்?" என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியினை எழுப்பியுள்ளது.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர்களும், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞரும் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

அதன்படி, வட மாவட்டங்களில் அணிவகுப்பை அக்டோபர் 25-ம் தேதியும், தென் மாவட்டங்களில் அணிவகுப்பை நவம்பர் 1-ம் தேதியும் நடத்துவதென்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 128 இடங்களில் அணிவகுப்பினை நடத்த அனுமதி கோரிய நிலையில், 58 இடங்களில் அணிவகுப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும், அணிவகுப்பிற்கு அனுமதி கோரிய வழித்தடங்களில் மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் அமைந்துள்ளதால், சட்டம் ஒழுங்கினை கருத்தில் கொண்டு அனுமதியளிக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி "தேவாலயங்கள், மசூதிகளை காரணம் காட்டி, ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எப்படி அனுமதி மறுக்க முடியும்?" என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எத்தனை முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்? அவர்களை தவறாக சித்தரிக்க வேண்டாம்" எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, எந்தெந்த இடங்களில், எத்தனை பேருடன் அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காவல்துறையினரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்றம் ஏற்கெனவே வகுத்துள்ள விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும், உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.