தமிழ்நாடு

ஒவ்வொரு கட்சியும் போட்டிப் போட்டு.. மாலை அணிவித்து வழிபடும் முத்துராமலிங்க தேவர் யார்? 'Gen Z' கிட்ஸ் தெரிஞ்சிக்க வேண்டிய 'ரியல்' ஹீரோ!

ஆங்கிலேய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடியதால் பலமுறை சிறைக்கு சென்றுள்ளார். அவரது வாழ்நாளில் ஏறத்தாழ 4,000 நாட்கள் சிறையில் கழித்ததாகக் குறிப்பிடப்படுகிறது

Muthu Lakshmi

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் எனஇந்த நாளின் முக்கியத்துவம் மட்டும் இதுவரை குறையவில்லை. முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளும் குருபூஜையும் ஒரே நாளில் அனுசரிக்கப்படுவதால், அனைத்து கட்சியின் அரசியல் தலைவர்களும் காலைமுதல் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் விஜய் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதற்கு முன்னதாக முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில், மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆளுநர் அர்லேகர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சி தலைவர்களும் போற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தமிழக அரசியலிலும் மக்கள் மனதிலும் இன்றளவும் பேசப்படுகிறார். இவரை பற்றி இன்றைய Gen Z தலைமுறையினருக்கு, பெரிதளவில் தெரிய வாய்ப்பில்லை. 

1908-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உக்கிரபாண்டியத் தேவர் - இந்திராணி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் முத்துராமலிங்கத் தேவர். 6 மாத குழந்தையாக இருந்தபோதே தாயை இழந்த முத்துராமலிங்க தேவர், இஸ்லாமிய பெண் ஒருவர் தாய்ப்பால் கொடுத்து வளர்த்ததாக அவரது வாழ்க்கைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பின்னர் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது இளம் வயதிலேயே சமூகப் பிரச்சினைகள், அரசியல், இந்திய விடுதலைப் போராட்டம் ஆகியவற்றில் ஆர்வம் காட்டத் தொடங்கினார் முத்துராமலிங்க தேவர்.

அரசியல் வருகை;

1927-ம் ஆண்டு தனது 19-வது வயதில் சென்னை வந்த முத்துராமலிங்கத் தேவர், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சீனிவாச ஐயங்காரைச் சந்தித்து, காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். மேலும் அப்போது நடந்த காங்கிரஸ் மாநாட்டில் விடுதலை வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைச் சந்தித்தார். இது முத்துராமலிங்க தேவர் அரசியல் பயணத்தில் முக்கியமான திருப்பமாக அமைந்தது.

நேதாஜியின் தேசியவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர், அவருடன் நெருக்கமாகச் செயல்பட்டார். பின்னர் 1939-ம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், காந்தியின் ஆதரவு பெற்ற பட்டாபி சீதாராமையாவை எதிர்த்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் ஏற்பட்ட பிரிவிற்கு பிறகு காங்கிரஸிலிருந்து விலகிய நேதாஜி, 1939-ம் ஆண்டு பார்வர்டு பிளாக் என்ற கட்சியைத் தொடங்கினார். முத்துராமலிங்க தேவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி நேதாஜியின் பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்து செயல்பட்டார்.

4,000 நாட்கள் சிறை!

சுதந்திரப் போராட்டத்தில் மட்டுமின்றி, ஆங்கிலேயர்களின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களிலும் முத்துராமலிங்கத் தேவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக மக்களைத் திரட்டிப் பாராட்டியுள்ளார். தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆங்கிலேய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடியதால் பலமுறை சிறைக்கு சென்றுள்ளார். அவரது வாழ்நாளில் ஏறத்தாழ 4,000 நாட்கள் சிறையில் கழித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அதாவது, தனது வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கு நாட்களைச் சிறையில் கழித்துள்ளார்.

சட்டமன்றம் முதல் பாராளுமன்றம் வரை..

1937-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து 1946-ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற அரசியலில் தனது செல்வாக்கை தொடர்ந்து நிலைநாட்டினார். மேலும் ஒடுக்கப்பட்ட மக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றதாகவும், அதற்காக ஆதிக்க சாதியினரை எதிர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

சுதந்திரப் போராட்டம், அரசியல் பொறுப்புகள் மற்றும் தொழிலாளர் நலனுக்காகப் போராடியவர் எனப் பல்வேறு அடையாளங்களைக் கொண்டிருந்தார் முத்துராமலிங்கத் தேவர். 1963-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி தனது 55-வது வயதில் மறைந்தார்.

அவர் மறைந்து பல தசாப்தங்கள் கடந்துவிட்டாலும், தமிழக அரசியலில் அவரது பெயரும் பங்களிப்பும் தொடர்ந்து பேசப்படுகின்றன. ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் குருபூஜையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்துகின்றனர். இதனால்தான் இன்றைய தலைமுறையினரும் அவரது வாழ்க்கை, அரசியல் பயணம், போராட்டங்கள் மற்றும் வரலாற்றுப் பங்களிப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.