தமிழ்நாடு

வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு... 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் 

தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Malaimurasu Seithigal TV

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும் விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆந்திரா ஒடிசா கடற்கரை நோக்கி நகரும் என்றும், இதன்காரணமாக  நாளை மறுதினம் வரை கடல் பகுதிகளில்  பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவித்துள்ளது. இதனால், மீனவர்கள் யாரும் அடுத்த 2 நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.