தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், மாமல்லபுரம் அருகே துணை நகரம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
முதல் உரை:
இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபை கூட்டத்தின் முதல் உரையை தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி என் இனிய தமிழ் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தொடங்கினார். தொடர்ந்து பேசிய ஆளுநர் உரையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது.
முக்கிய திட்டங்கள்:
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்த 2030க்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், மதுரையில் 3ஆவது தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காலை உணவு திட்டம்:
மேலும், காலை உணவுத் திட்டத்தின் மீலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் சமத்துவபுரம் திட்டத்தைக் குறித்து தொடர்ந்து பேசியுள்ளார்.
சமத்துவபுரம்:
அதாவது, அனைத்துச் சமூகத்தினரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பெரியார் ஆகியோர் இணைந்து சமத்துவபுரத்தைக் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த பெரியார் சமத்துவபுரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு முதற்கட்டமாக 140 பெரியார் நினைவு சமத்துவபுரங்களைச் சீரமைக்க 190 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மினி டைடல்:
மினி டைடல் பார்க் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு வருவதாக கூறிய அவர் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்று கூறியதோடு இதன் மூலமாக மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
துணை நகரம்:
மேலும், மாமல்லபுரம் அருகே துணை நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்த அவர் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமையவுள்ள இந்த நகரத்தால் சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்லும் என தெரிவித்துள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ஆளுநர் உரையில் கூறியவை என்ன....விரிவாக!!!