தொங்கு சட்டமன்றம்  தொங்கு சட்டமன்றம்
தமிழ்நாடு

"விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கலா?" 74 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரும்பிய வரலாறு! - களம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு தொங்கு சட்டசபை அமையுமென்ற நிலை உருவாகியுள்ளது.

Vinvizhi Leninton

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தொங்கு சட்டசபை அமையுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய்யின் தவெக 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி 73 இடங்களுடனும், அதிமுக கூட்டணி 53 இடங்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களில், எந்தக் கட்சியோ அல்லது கூட்டணியோ தெளிவான பெரும்பான்மையைப் பெறாததால், தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் "கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எந்த கட்சியை அழைப்பார்?" என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் இதற்கு முன்பாக தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு 'தொங்கு சட்டசபை' அமையுமென்ற நிலை உருவாகியுள்ளது.

பெரும்பான்மை அரசை அமைப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச இடங்களை எந்தவொரு அரசியல் கட்சியும், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியும் பெறாதபட்சத்தில் ஏற்படுவதுதான் 'தொங்கு சட்டமன்றம்' எனப்படுகிறது. தற்போது அது ஏற்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார். அந்தக் கட்சிக்கு காலஅவகாசம் வழங்கப்படும். அந்த சமயத்தில் சட்டப்பேரவையில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை அந்தக் கட்சி அல்லது கூட்டணி உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை வேறு கட்சிகள் ஆட்சியமைக்க உரிமை கோரும்பட்சத்தில் அதற்கு ஆளுநர் முடிவெடுத்து அழைப்பு விடுக்கப்படலாம். எதற்குமே வாய்ப்பில்லாதபட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, மீண்டும் ஒரு முறை தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தபோது, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற பகுதிகளை உள்ளடக்கிய 'மெட்ராஸ்' மாகாணமாக இருந்தது. அப்போது சட்டப்பேரவையில் 375 இடங்கள் இருந்தன. அப்போது பெரும்பான்மைக்கு 188 MLA-க்கள் வேண்டுமென்ற நிலையில், 1952-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 152 இடங்களில் மட்டுமே வென்றது. தொங்கு சட்டமன்றமாக மாறியதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்டது. அதன் பின்பு இதிலிருந்து சற்று வித்தியாசமாக 2006ம் ஆண்டு திமுக 96 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் திமுக கூட்டணி மொத்தம் 163 இடங்களில் வெற்றி பெற்றதால், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பாமக துணையுடன் அப்போது ஆட்சி அமைத்தது திமுக.

தற்போது இரண்டு தொகுதிகளில் ஒருவர் MLA-வாக இருக்கமுடியது என்பதால் தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு அல்லது பெரம்பூர் தொகுதி ஏதாவது ஒன்றி அவர் ராஜினாமா செய்யவேண்டிய நிலை உள்ளதால், 108 தொகுதி 107-ஆக குறையும். அதனால் தற்போது 11 MLA-களின் ஆதரவு தேவைப்படுகிறது. கூட்டணி அல்லது வெளி கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பாமக, காங்கிரஸ், சிபிஐ(எம்), சிபிஐ, விசிக போன்ற காட்சிகள் ஆதரவு தரும் பட்சத்தில் விஜய் ஆட்சியமைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.