madhampatti rangaraj issue  
தமிழ்நாடு

"DNA சோதனைலாம் தேவையில்ல.. கிரிஸில்டா என் மனைவி தான்.. குழந்தையும் நான் பெற்றது தான்" - பகிரங்கமாக அறிவித்த மாதம்பட்டி ரங்கராஜ்!

"நான் அவரோடு வாழணும். என் குழந்தைக்கு அவர் தான் அப்பா....

மாலை முரசு செய்தி குழு

நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜும்  ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் 7 மாத கர்ப்பிணியான தன்னை கைவிட்டுவிட்டதாக கூறி, காவல் நிலையத்தில் புகாரும்  அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த 31 -ஆம் தேதி இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் அந்த குழந்தைக்குதான்தான் அப்பா என ஒப்புக்கொண்டுள்ளது கிறிசில்டாவின் பல நாள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. 

பின்னணி!

மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், ஜாய் கிறிசில்டா ஜில்லா, மிருதன், ரெக்கை உள்ளிட்ட படங்களுக்கு ஆடை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ், தனது உறவுக்கார பெண்ணான சுருதி பிரியா என்பவரை திருமணம் செய்துகொண்டு அவருக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், அவரால் பலமுறை கர்ப்பமடைந்து கருக்கலைப்பு நிகழ்ந்ததாகவும், இம்முறை கருவை கலைக்க மறுத்ததால், தன்னையும் குழந்தையும் விட்டு சென்றுவிட்டார் எனவும் சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் கிறிசில்டா புகார் அளித்திருந்தார்.

மேலும், இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்களையும், 7 மாத கர்ப்பிணியான தானும் இந்த குழந்தையும் போராடிக்கொண்டிருப்பதாகவும், சமூக வலைத்தளங்களில் மிகவும் உணர்வு பூர்வமாக பதிவிட்டிருந்தார். இவர்களின் இந்த சர்ச்சையான உறவால், ரங்கராஜ் தனது முதல் குடும்பம் மற்றும் பொதுவெளியில் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருவதாகவும் பேசப்பட்டது. 

ஆனாலும், ஜாய் கிறிசில்டா மாதம்பட்டி ரங்கராஜன் மீது அடுத்தடுத்து புகார் கொடுத்து வந்தார். மாதம்பட்டி ரங்கராஜன் தன்னை திருமணம் செய்துகொண்டு  ஏமாற்றி விட்டார் என்று கொடுத்திருந்த புகாருக்கான விசாரணை நடைபெற்று வரும் நிலையில்தான் கர்ப்பிணியாக இருப்பதால் தன்னுடைய குடும்ப செலவு மற்றும் மருத்துவ செலவுக்காக மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு மாதம் ஆறரை லட்சம் ஜீவனாம்சம் தரவேண்டும் என்ற மனு ஒன்றையும் கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் தான் அவருக்கு 31 -ஆம் தேதி இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மேலும் 7 மாத  கர்ப்பிணியாக இருந்தபோதுமே அவர், நீதிமன்றம், மகளிர் ஆணையம் என அலைந்துகொண்டுதான் இருந்தார். மேலும் சமூக வலைத்தளங்களிலும், இருவர் மீதும் பல விமர்சனங்களும், அவதூறுகளும் எழுந்து வந்தது. 

இந்நிலையில்தான் ஜாய்  மகளிர் ஆணையத்தில் ஒரு புகார் ஒன்றை அளித்திருந்தார். “கடந்த 1.5 ஆண்டுகளாக நாங்கள் திருமணம் செய்து ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தோம். நான் அவரோடு வாழணும். என் குழந்தைக்கு அவர் தான் அப்பா. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதுதான் அந்த புகார். 

இதுகுறித்த விசாரணையை கையில் எடுத்த ஆணையம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பி அவரை நேரில் வரவழைத்தது. மகளிர் ஆணையத்தில் இருவரும் இரண்டு முறை விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர். 

இந்நிலையில் இன்று மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இது தொடர்பாக மகளிர் ஆணையம் அறிக்கையும் வெளியிட்டிருந்தது. 

இந்த நிலையில்தான்,  மகளிர் ஆணையம் முன்பு தான் ஜாய் கிறிசில்டா திருமணம் செய்ததை மாதம்பட்டி ரங்கா ராஜ் ஒப்புக்கொண்டார். புகார்தாரரான ஜாய்க்கு பிறந்த குழந்தையின் தந்தை தான்தான் என்பதையும் DNA சோதனை எல்லாம் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மகளிர் ஆணையம் இது தொடர்பான ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது, அந்த அறிக்கையில், 

“இந்த ஆணையம் எந்தக் குழந்தையும் சட்டவிரோதக் குழந்தை அல்ல என்று நம்புகிறது, இந்த உலகில் அவை அனைத்தும் ஒரு தந்தை மற்றும் தாய்க்காகப் பிறந்தவை. மற்ற மூத்த ஜனநாயக நாடுகளைப் போலல்லாமல், எந்த இந்தியப் பெண்ணும் தனது குழந்தைகளின் தந்தை என்று யாரையும் உரிமை கோர மாட்டார்கள் என்று இந்த ஆணையம் நம்புகிறது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக உரிமைகளை அனுபவித்து வரும் மூத்த ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு சம உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றன, ஆனால் இந்தியாவில் அரசியலமைப்பு உரிமைகள் அதன் குடிமக்களுக்கு உரிமைகளை கடந்த 75 ஆண்டுகளாக மட்டுமே உத்தரவாதம் செய்கின்றன, மேலும் பெண்களின் சுதந்திரத்தில் சமூக மாற்றம் இன்னும் வளர்ச்சி நிலையில் உள்ளது. இந்தியப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் உயிரியல் தந்தை என்று யாரையாவது தவறாக அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல்களை நன்கு அறிவார்கள். இந்த சமூகத் தடைகள் மற்றும் பொது அவமானங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஒரு பெண் தனது குழந்தைகளின் உயிரியல் தந்தை என்று கூறுவதை எளிதில் புறக்கணிக்க முடியாது. பெண்களின் கூற்று முதன்மையான தோற்றத்தையும் இப்போது ஒரே அறிவியல் வழியையும் நிறுவுகிறது.

தனது உரிமையை நிறுவுவதற்கான வழி டிஎன்ஏ சோதனை மட்டுமே, ஆனால் இந்த விஷயத்தில் திரு. மாதம்பட்டி ரங்கராஜ் இந்தக் குழந்தைக்கு தனது தந்தை என்று ஒப்புக் கொள்ளப்படுகிறார், எனவே வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை, மேலும் இந்தக் குழந்தைக்கு உணவளித்து பராமரிக்கும் பொறுப்பு அவரிடமே உள்ளது. குழந்தை பிறந்த ஆரம்ப காலத்தில் ஒரு பெண் தனது கணவரிடமிருந்து சரியான கவனிப்பு இல்லாமல் எப்படி பாதிக்கப்படுவார் என்பதை இந்த ஆணையம் புரிந்து கொள்ள முடியும்.

மனைவி மற்றும் குழந்தைகளைப் பராமரிப்பது என்பது பொதுவாக சிவில் நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய ஒரு சிவில் தகராறாகும். ஆனால் இந்த விவகாரம் சிவில் நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கப்படும் வரை, ஒரு குழந்தை பராமரிக்கப்படாமல் இருக்க அனுமதிக்க முடியாது. இந்த வழக்கில் திரு. மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே இந்தக் குழந்தை தனது சொந்தக் குழந்தை என்று ஒப்புக்கொண்டுவிட்டார், மேலும் அவர் உண்மையான புகார்தாரரை மணந்து இரண்டையும் பராமரிக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக ஜாய்  கிறிசில்டா காவல்நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும், ஆணையத்துக்கும் நடையாய் நடந்தார். திருமணமான ஒருவரை ஏன் காதலித்து கர்ப்பமானீர்கள்? என கேட்கும் சமூகம், திருமணம் ஆகிய பின்னரும் ஏன் இரண்டாவது ஒரு பெண்ணை கர்ப்பமாக்கினீர்கள்? என கேட்பது இல்லை. ஒருவேளை இவர்கள் செய்தது சட்டப்படி தவறு என்றால் இருவரும் தவறிழைத்தவர்கள்தான். இம்மாதிரியான உறவு சிக்கல்களில் ஒருவரை மட்டும் குறை சொல்லுவது நியாயமாக இருக்காது. மேலும் அந்த குழந்தை இவர்கள் பிரச்சனைகள் எல்லாம் முடியும் வரை வளராமலோ, பராமரிப்பில்லாமலும் இருக்க முடியாது அல்லவா? எனவே ஆணையத்தின் முன்பு ரங்கராஜ் ஒப்புக்கொண்டது குழந்தையின் எதிர்காலத்திற்கு நல்லது என்கின்றனர் சிலர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.