Madras high court  
தமிழ்நாடு

தொண்டர்களை கைவிட்டு ஓடிய தவெக நிர்வாகிகள்..!! “அந்த கட்சியில விஜய் உட்பட யாருக்கும் தலைமை பண்பே இல்ல.." - நீதிமன்றம் சுளீர்!!

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், வழிகாட்டு நெறிமுறைகள் ...

மாலை முரசு செய்தி குழு

கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் பேரணி செல்ல அனுமதி வழங்கப்படாது என  உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, த.வெ.க கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நகர செயலாளர் பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப்பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அவர்கள் இருவரும் முன் ஜாமீன் கோரியுள்ளனர். புலன் விசாரணை நடந்து வருகிறது என, காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா விளக்கமளித்தார்.

இதையடுத்து நீதிபதி செந்தில்குமார்,  இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.  பின்னர், வீடியோக்களை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது எனக் குறிப்பிட்ட நீதிபதி செந்தில் குமார், 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.  அனைத்தையும்  அனுமதித்துள்ளீர்கள் என அரசுக்கு அதிருப்தி தெரிவித்தார்.

காவல் துறை கண்மூடிக் கொண்டிருக்க முடியாது. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைவரும் சம்பவ இடம் சென்றுள்ளனர் எனத் தெரிவித்த நீதிபதி, நடிகர் விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன எனச் சுட்டிக்காட்டினார்.

பேருந்து விபத்து தொடர்பாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டதா, வழக்குப்பதிய என்ன தடை. காவல்துறை தனது கைகளை கழுவி விட்டதா? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களோ? பேருந்து மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்குப்பதிவு செய்து, பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? இந்த விஷயத்தில் நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றார். 

இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், த.வெ.க கேட்ட இடத்தை தான் ஒதுக்கினோம். 11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இரு நிபந்தனைகள் மட்டும் பூர்த்தி செய்யப்பட்டன. மீதமுள்ள நிபந்தனைகள் மீறப்பட்டன. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதே இடத்தில் பிரச்சாரம் செய்துள்ளார். த.வெ.க நிகழ்ச்சிக்கு 559 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டனர். அரசு மீது குறை கூறுவது எளிது. டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி திடீரென செப்டம்பருக்கு மாற்றப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார். கரூரில் நடந்த சம்பவம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. நீதிமன்றம் இதை கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க இருக்க முடியாது. பொறுப்பை தட்டி கழிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

பின்னர், பெண்கள், குழந்தைகள் பலியான நிலையில், கட்சி தொண்டர்களை, ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு ஓடிய, த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தலைமைப் பண்பு இல்லை. சம்பவத்துக்கு பொறுப்பேற்கவும் இல்லை என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சம்பவம் நடந்து ஒரு வாரகாலமானதைச் சுட்டிக்காட்டி, வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு தொடரான ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலனாய்வு குழு வசம் ஒப்படைக்க, கரூர் போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.