தமிழ்நாடு

நார் பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

Malaimurasu Seithigal TV

கீரமங்கலம் அருகே தென்னை மட்டையில் இருந்து நார் பிரிக்கும் இயந்திரத்தில் மாட்டி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இளைஞர் உயிரிழிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள செரியலூர் கரம்பக்காடு பகுதியில் ரவி என்பவருக்குச் சொந்தமான கயிறு ஆலை மற்றும் தென்னை மட்டையில் இருந்து நார் பிரித்தெடுக்கும் ஆலை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலையில் 35 வட மாநிலத் தொழிலாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு நேரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெரோஸ் கடாட் (32) என் இளைஞர் தென்னை மட்டையில் இருந்து நார் பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக இயந்திரத்தினுள் மாறியதாக கூறப்படுகிறது.

இரவு நேரத்தில் பணியில் இருந்த சக ஊழியர்கள் அனைவரும் காதில் ப்ளூடூத் இயந்திரத்தின் மூலம் பாடல்களைக் கேட்டுக் கொண்டு பணியில் இருந்ததாகவும், அதனால் அவர் இயந்திரத்தில் மாட்டியது யாருக்கும் கேட்கவில்லை எனவும் ஊழியர்கள் கூறும் நிலையில், இயந்திரத்தில் மாட்டிய பெரோஸ் கை துண்டாகியதோடு கழுத்திலும் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சற்று நேரம் கழித்து பணியில் இருந்த சக ஊழியர் பார்த்த போது பெரோஸ் இயந்திரத்திலேயே உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலை உரிமையாளர் மற்றும் கீரமங்கலம் போலீசார் பெரோஸின் உடலை மீட்டு அறந்தாங்கி அரசுத் தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.