தமிழ்நாடு

கனமழை எதிரொலி: தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி...!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்ந்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், கனமழையால் அப்பகுதியில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால், நகர் பகுதியிலுள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் இல்லாத காரணத்தால் அக்கூடம் முழுவதும் கடல் போல் மழைநீர் தேங்கியது.

நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது பெய்த கனமழையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில், தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் பல மணி நேரத்திற்கு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.