தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்பு சோதனை.... அலுவலகத்தை பூட்டிய அதிகாரிகள்... கைப்பற்றப்பட்ட பெரிய தொகை!!

Malaimurasu Seithigal TV

மாநிலம் முழுவதும் 12 அரசுத் துறைகளில், 60 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 33 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

புகார்கள்:

தமிழ்நாட்டில் உள்ள பத்திரப் பதிவு அலுவலங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் அதிக அளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. 

திடீர் சோதனை:

திருவண்ணாமலையில்..:

இதன் அடிப்படையில், திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இணை சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் செய்யாறு இணை சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, பத்திரப் பதிவுக்காக வருகை தந்த 40-க்கும் மேற்பட்டோரிடம் பத்திரப்பதிவு நகல், ஆவணம் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

பொன்னேரியில்..:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில், ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் விஸ்வகுமார், நாகலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, பத்திரப் பதிவு அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள், இடைத் தரகர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த பரிசோதனையின் போது பத்திரப்பதிவு அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டியதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 

சேலத்தில்..:

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை  காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.  ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ரகுபதி, உதவியாளர் சுகனேஸ்வரன் ஆகியோரின் மேசை உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  இதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

குன்னூரில்..:
 
நீலகிரி மாவட்டம் குன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.  இந்த அலுவலகத்தில் முறைகேடுகள் அதிகம் நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையின்போது ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

60க்கும் மேற்பட்ட:

இதேபோல் மாநிலம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் முடிவில், 33 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும், சம்பந்தப்பட்ட துறைகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.