தமிழ்நாடு

மீண்டும் மாணவர் மன்றம்; திமுக மாணவர் அணிக்கு அறிவுறுத்தல்!

Malaimurasu Seithigal TV

தமிழகம் முழுவதும் மீண்டும் மாணவர் மன்றம் தொடங்க திமுக மாணவர் அணிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடுவதற்கு திமுக சார்பில் பொறுப்பு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி சார்பில் மாவட்டம் வாரியாக பேச்சுப்போட்டி நடத்தி மாநில அளவில் சிறந்த 100 பேச்சாளர்களை கண்டறிந்து திமுக சொற்பொழிவாளர்களாக மாற்றுதல் மற்றும் அவர்களுக்கு மண்டலம் வாரியாக ஒரு நாள் பயிற்சி அளித்தல், கலைஞர் படிப்பகங்கள் அமைத்தல், மாவட்டம் வாரியாக மாரத்தான் தொடர் ஓட்டம் நடத்துதல் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் கலைஞர் Reels செய்து வெளியிட வேண்டும். திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை மகளிர் தொண்டரணி நடத்த வேண்டும் என்று மொத்தம் 39 தலைப்புகளில் நிகழ்ச்சிகளை நடத்திட திமுக பொறுப்பு அணிகள் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் திராவிட கொள்கைகளைக் கொண்ட மாணவர்கள் மூலம் தமிழ்நாடு மாணவர் மன்றம் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு மாணவர் மன்றமானது அரசியல் சார்பற்று கல்லூரி மாணவர்களின் தேவைகளையும் பிரச்சனைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக மாநில அளவில் ஒரு தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். திமுக மாணவர் அணியுடன் இணைந்து மாணவர் மன்றம் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.