தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் வெற்றியை உறுதி செய்ய பம்பரமாக சுழன்றுகொண்டு இருக்கின்றன. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 11 அதிமுக -வும் பாஜக -வும் தங்களின் கூட்டணியை உறுதி செய்தன. ஆனால் கூட்டணி வைத்த நாளிலிருந்தே அதிமுக -பாஜக கூட்டணி அடிமட்ட அளவில் ஒன்றிணையவில்லை என்ற கூற்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அதையெல்லாம் சரிசெய்து இப்போதுதான் இரு கட்சிகளும் தங்களின் ஒற்றுமையை உறுதி செய்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில், NDA கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராக கழன்றுகொண்டு வரும் போக்கும் நிகழ்கிறது.
இத்தகு பரபரப்பான சூழலில்தான் அதிமுக பொதுச்செயலாளர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அமித்ஷாவை சந்தித்தார். அவர் அமித்ஷாவை சந்தித்து வந்ததே பெரும் பேசுபொருளாக மாறியது. அதற்கு காரணம், எடப்பாடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஒரு மணி நேரம் தனிமையில் உரையாடலை நடத்தினார். பிறகு வெளியில் வந்த எடப்பாடி செய்தியாளர்களை சந்திக்காமல் முகத்தை கைக்குட்டையை வைத்து முகத்தை மறைத்துக்கொண்டதாக பல தகவல் வெளியாகின.
நேற்று நடந்த கரூர் கூட்டத்தில் கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் “முழுவதும் நனைந்த பிறகு’ முக்காடு எதற்கு என கடுமையாக விமர்சித்திருந்தார். அதுமட்டுமின்றி டிடிவி தினகரனும் “முகமூடி எடப்பாடியார்” என கலாய்த்து தள்ளியிருந்தார்.
இந்த செய்தி பழனிச்சாமியை மிகவும் கடுமையாக பாதித்திருப்பதாகவே தோன்றுகிறது, அதற்கு காரணம், இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு, இதில், “நான் முகத்தை துடைத்ததை இவ்வளவு பெரிய செய்தியாக மாற்ற வேண்டுமா? அந்த அளவுக்கு ஊடகம் தரம் தாழ்ந்து போய்விட்டதா? நான் இனிமேல் Rest room போனால் கூட உங்களிடம் சொல்லிவிட்டு போகிறேன்” என்று காத்திரமான விமர்சனங்களை முன்வைத்தார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முகத்தை கைக்குட்டையால் மூடியிருந்ததை வீடியோ ஆதாரத்தோடு செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் நிரஞ்சன் குமார் -க்கு எதிராக அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றமும் வேறு சில பத்திரிகை அமைப்புகளும் பெரும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த பஞ்சாயத்துகளுக்கு எல்லாம் இடையில், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் “அந்த காரில் போனது எடப்பாடியே இல்லை” என ஒரே போடாக போட்டுள்ளார். அதற்கு அவர் சொல்லும் காரணம் இன்னும் ருசிகரமானது, “பழனிச்சாமி, அமித்ஷா சந்திப்பு கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்துள்ளது. ஆனால் கடந்த காலங்களில் ஏதாவது ஒரு இடையூறு என்றால் உடனே சென்று அமித்ஷாவிடம் சரணைக்கிறார் எடப்பாடி, இவருக்கு ஆளுமை இல்லை என தொடர்ந்து ஊடகங்கள் எழுதி வருகின்றன, ஏன் “முகத்தை எதற்கு கைக்குட்டையால் பழனிச்சாமி மூட்டுகிறார்” என்று அதிமுக தொண்டர்களே நினைக்கும் சூழலில்தான் இருக்கிறது. தவிர பழனிச்சாமி ஒன்றும் ரகசியமாக சென்று அமித்ஷாவை சந்திக்கவில்லை. முன்கூட்டியே அறிவித்துவிட்டுதான் சென்றிருக்கிறார். பதிக்கையாளர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டாமா? எப்போதும் தலைவர்கள் காரின் முன்பகுதியில்தான் அமருவார்கள். பின்னல் அமர்ந்து முகத்தை மூடவேண்டிய அவசியமே இல்லை. அது பழனிச்சாமியே இல்லை. 2 மணி நேரம் கழித்து வந்த காரில் பார்த்தீர்களேயானால் அவர் சிரித்துக்கொண்டே போயிருப்பார்” இவ்வாறாக பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.