திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் சென்று கொண்டிருந்த, 29 C வழித்தட எண் கொண்ட சாதாரண மாநகரப் பேருந்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திடீரென பேருந்தில் ஏறிய முதலமைச்சர், பெண்களுக்கு வழங்கக்கூடிய இலவச பயணச்சீட்டு குறித்து நடத்துநரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பேருந்தில் பயணித்த பயணிகளிடம், குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது சாதாரண கட்டண பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்த பயணிகள், இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து சிறிது தூரம் பேருந்தில் பயணித்த முதலமைச்சர், பின்னர் தனது காரில் புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடை பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் இதே 29 C பேருந்தில் தினமும் பயணித்ததாகவும், அதன் நினைவாகவே, இந்த பேருந்தில் ஆய்வு மேற்கொண்டதாகவும், சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.