மதுரையில் ஆன்லைன் ரம்மியில் 2 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் சேலத்தை சேர்ந்த குணசீலன் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்துள்ளார். கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்த குணசீலன் அதிக அளவிலான பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் வேறு வழியின்றி ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இருப்பினும், ரம்மிக்கு அடிமையான இவர், நண்பர்களிடம் மேலும் பணம் வாங்கி விளையாடி உள்ளார்.
இதையும் படிக்க : எல்ஐசி, எஸ்பிஐ வங்கிகள் முன்பு காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம்...!
இந்நிலையில், அதிக அளவில் பணத்தை இழந்ததால் மன உளைச்சலில் இருந்த குணசீலன், சாத்தமங்கலம் பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் காவல்துறையினர், குணசீலன் உடலை கைப்பற்றி ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற 42-வது தற்கொலை நிகழ்வுக்கு, தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், குணசீலனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.