தமிழ்நாடு

நத்தத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பாரா நத்தம் விஸ்வநாதன்? அதிமுகவின் கோட்டையைத் தகர்க்குமா திமுக? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் கணிப்புகள்!

நாம் தமிழர் கட்சி 6%-லிருந்து 10% ஆக உயர்ந்து, முதல் முறையாக ரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை எட்டியுள்ளது...

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் நத்தம் தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மிகவும் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றான நத்தம், கடந்த பல தேர்தல்களாக அதிமுகவின் அசைக்க முடியாத பலத்தை உலகிற்குப் பறைசாற்றி வருகிறது.

வாக்காளர் அடையாளங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்பு:

நத்தம் தொகுதியில் 18 முதல் 25 வயதுடைய இளம் தலைமுறை வாக்காளர்கள் 14.4% ஆக உள்ளனர். இது தமிழகத்திலேயே இளைஞர்கள் அதிகம் உள்ள ஒரு சில தொகுதிகளில் ஒன்றாகும். சமூக ரீதியாகப் பார்த்தால், முக்குலத்தோர் சமூகம் 22% ஆகவும், தேவேந்திர குல வேளாளர்கள் 18% ஆகவும் உள்ளனர். இவர்களைத் தவிர பிள்ளைமார்கள் 13%, வேளாள கவுண்டர்கள் 12% மற்றும் கிறிஸ்தவர்கள் 8% என உள்ளனர். மற்ற சமூகத்தினர் 27% அளவில் உள்ளனர். இது பிரதானமாக ஒரு கிராமப்புறத் தொகுதியாகும்.

நத்தம் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய உள்ளூர் பிரச்சனைகள்:

நத்தம் - திண்டுக்கல் - துவரங்குறிச்சி சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் இப்பகுதி மக்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. போதிய வேலைவாய்ப்பு வசதிகள் இல்லாததால், இத்தொகுதியின் இளைஞர்கள் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்குப் புலம்பெயரும் சூழல் நிலவுகிறது. ஆக்கிரமிப்புகளால் ஏரி மற்றும் குளங்கள் தூர்ந்து போயுள்ளது விவசாயத்தைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் ஊழியர்கள் இல்லை என்பதும் மக்களின் நீண்ட காலப் புகாராக உள்ளது.

தேர்தல் வரலாறு (2021 vs 2024):

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் 48.23% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக 42.82% வாக்குகளைப் பெற்றது. ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 57.1% ஆகத் தனது நிலையை உயர்த்தியுள்ளது. அதே சமயம் அதிமுக 30.38% ஆகச் சரிந்துள்ளது. நாம் தமிழர் கட்சி 6%-லிருந்து 10% ஆக உயர்ந்து, முதல் முறையாக ரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை எட்டியுள்ளது.

2026 தேர்தல் கணிப்பு மற்றும் பூத் நிலவரம்:

வாக்குச் சாவடி வாரியாகப் பார்த்தால், 2021-ல் அதிமுக 135 பூத்களில் வலுவாக இருந்தது. 2024-ல் அது 93 ஆகக் குறைந்துள்ளது. திமுக 84 பூத்களிலிருந்து 113 ஆகத் தனது பலத்தை உயர்த்தியுள்ளது. இருப்பினும், வரும் 2026 தேர்தலில் அதிமுக 115 பூத்களில் வலுவடைய வாய்ப்புள்ளது. திமுக 102 பூத்களில் ஸ்ட்ராங்காக உள்ளது. சுமார் 60 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

கான்சிலிடிக்ஸ் குழுவின் 2026 முன்கூட்டிய கணிப்பின்படி, அதிமுக 36% வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 34% வாக்குகளைப் பெறக்கூடும். நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இணைந்து 24% வாக்குகளைப் பிரிக்கும். வெற்றி வித்தியாசம் வெறும் 2% ஆக மட்டுமே இருக்கும். நத்தம் விஸ்வநாதன் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கும், அதிமுகவின் சமூகக் கட்டமைப்பும் இணைந்து மிக நெருக்கமான போட்டியில் அதிமுகவிற்குச் சிறிய அட்வான்டேஜை வழங்குகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.