sholinganallur 
தமிழ்நாடு

சோழிங்கநல்லூர்.. தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதியில் யாருக்கு மகுடம்? 2 சதவீத வாக்கு வித்தியாசத்தில் அதிரடி திருப்பம்!

எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தாலும், அடிப்படை வசதிகளில் நிலவும் குறைகள் அவருக்குச் சவாலாக உள்ளன...

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதியான சோழிங்கநல்லூர், ஐடி நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த ஒரு நவீன களமாகும். 87 சதவீத நகர்ப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், படித்த நடுத்தர வர்க்கத்தினரின் முடிவுதான் கடந்த காலங்களில் வெற்றியைத் தீர்மானித்துள்ளது. தற்போதைய எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தாலும், அடிப்படை வசதிகளில் நிலவும் குறைகள் அவருக்குச் சவாலாக உள்ளன.

இந்தத் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 40.8 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 32.2 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக வன்னியர்கள் 26 சதவீதத்தோடு பெரும்பான்மை வகிக்கிறார்கள். ஆதிதிராவிடர்கள் 12 சதவீதமும், நாடார்கள் 10 சதவீதமும், முதலியார்கள் 10 சதவீதமும், மீனவர்கள் 8 சதவீதமும் உள்ளனர். 34 சதவீத அளவில் இதர சமூகத்தினர் வசிக்கும் இந்தத் தொகுதியில், வெளிமாவட்டங்களில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்களின் வாக்குகள் மிக முக்கியமானவை.

சோழிங்கநல்லூர் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலைகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் முதலிடத்தில் உள்ளது. மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் மழைக்காலங்களில் வடியாத வெள்ள நீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மைச் சீர்கேடு போன்றவை மக்களின் பெரும் குமுறலாக உள்ளன. வேகமாக வளர்ந்து வரும் இந்தத் தொகுதியில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து வருவதும், புதிய குடியிருப்புகளுக்குத் தெருவிளக்கு மற்றும் சாலை வசதிகள் இல்லாமையும் பெரும் குறையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் குடியிருப்புகளில் நிலவும் அடிப்படை வசதிக் குறைபாடுகளும் தேர்தல் களத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.

தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 44.5 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-ல் 46.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 35.3 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 39.8 சதவீதமாகத் தனது செல்வாக்கை உயர்த்தியுள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 167 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் அது 140 ஆகக் குறைந்துள்ளது. அதிமுக 2021-ல் 146 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 98 பூத்களாகக் குறைந்துள்ளது. சுமார் 31 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

2026 தேர்தல் கணிப்பின்படி, சோழிங்கநல்லூரில் திமுக 130 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. அதிமுக 115 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 45 வாக்குச்சாவடிகள் ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 32 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 35 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 28 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் வெறும் 2 முதல் 3 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்பதால், மக்கள் கையில் தான் இறுதி வெற்றி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.