தமிழ்நாடு

அம்பத்தூர் தொகுதியை அதிரவைக்கும் கருத்துக் கணிப்பு! 21 சதவிகித வாக்குகளை அள்ளுகிறதா த.வெ.க? தி.மு.க.வின் நிலை என்ன?

அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் கே.என். சேகருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக ஆய்வுகள்

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் அம்பத்தூர் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டையைக் கொண்ட அம்பத்தூர், ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிகம் வசிக்கும் ஒரு நவீன நகர்ப்புறத் தொகுதியாகும். கடந்த தேர்தலில் தி.மு.க.வின் ஜோசப் சாமுவேல் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுப் புதிய வேட்பாளர் களம் இறக்கப்பட்டுள்ளார். அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் கே.என். சேகர் போட்டியிடுகிறார்.

இத்தொகுதியின் முக்கிய வாக்காளர் விவரங்களைப் பார்க்கும்போது, 18 முதல் 25 வயதுடைய இளம் வாக்காளர்கள் 11.5 சதவீதமும், 40 வயதிற்கு உட்பட்டவர்கள் மொத்தமாக 40 சதவீதமும் உள்ளனர். நடுத்தர வயதுடையவர்கள் மற்றும் முதியவர்கள் மீதமுள்ள 60 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளனர். சாதி ரீதியான அடிப்படையில் ஆதிதிராவிடர்கள் 40 சதவீதமும் (இதில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் 18 சதவீதம்), வன்னியர்கள் 31 சதவீதமும் உள்ளனர். நாடார்கள் 5 சதவீதம் பேர் வசிக்கின்றனர். 95 சதவீத நகர்ப்புறத் தன்மையைக் கொண்ட இத்தொகுதியில் படித்த மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம்.

அம்பத்தூர் தொகுதியின் முக்கிய உள்ளூர் பிரச்சினையாகச் சொத்து வரி விதிப்பு உள்ளது. சென்னை மாநகராட்சியின் மற்ற மையப் பகுதிகளை விட அம்பத்தூரில் சொத்து வரி மிக அதிகமாக இருப்பது மக்களிடையே நீண்ட நாள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அம்பத்தூர் ஏரியைச் சீரமைத்துப் பூங்காவாக மாற்றினாலும், தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. 2010-ல் அறிவிக்கப்பட்ட சென்னை - திருத்தணி நெடுஞ்சாலை (CT Road) விரிவாக்கப் பணிகள் நிதி ஒதுக்கப்பட்டும் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பது பெரும் போக்குவரத்துச் சிக்கலை ஏற்படுத்துகிறது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மக்கள் இன்றும் கே.எம்.சி. அல்லது ஜி.ஹெச். மருத்துவமனைகளையே நாட வேண்டிய நிலை உள்ளது.

அம்பத்தூர் தொகுதியின் முழு கருத்து கணிப்பு பற்றி தெரிந்து கொள்ள: இங்கே கிளிக் செய்யவும்

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தி.மு.க. வேட்பாளர் ஜோசப் சாமுவேல் 48.10 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வின் அலெக்சாண்டர் 30.40 சதவீத வாக்குகளைப் பெற்றார். அப்போது மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சி தலா 10 சதவீத வாக்குகளைப் பெற்றுப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலு 52 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார். அந்தத் தேர்தலில் தி.மு.க. 130 வாக்குச் சாவடிகளில் (Booths) பலமாகவும், அ.தி.மு.க. வெறும் 65 சாவடிகளில் மட்டுமே பலமாகவும் இருந்தன.

"கான்சிலிடிக்ஸ்" குழுவின் 2026 தேர்தல் கணிப்பின்படி, அம்பத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. இந்த ஆய்வின்படி அ.தி.மு.க. கூட்டணி 39 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. 36 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்கும். தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து சுமார் 25 முதல் 27 சதவீத வாக்குகளைப் பெற்றுப் பிரம்மாண்டமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக, த.வெ.க. மட்டும் 21 சதவீத வாக்குகளைப் பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி வித்தியாசத்தைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தி.மு.க. இடையே சுமார் 3 சதவீத வாக்குகள் மட்டுமே வேறுபாடு உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் கே.என். சேகருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் 30 வாக்குச் சாவடிகளே இந்த வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளன. தி.மு.க. தனது வேட்பாளரை மாற்றியுள்ளதும், த.வெ.க.வின் வருகையும் ஆளுங்கட்சிக்குச் சவாலாக அமையக்கூடும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.