தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!

Malaimurasu Seithigal TV

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் உருவாக்கியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதையடுத்து கடலூர் நகர் பகுதிகளில் குளம் தேங்கியிருக்கும் மழை நீரை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆய்வு செய்து, ஜேசிபி இயந்திரம் மூலம் தேங்கிய மழை நீரை அகற்ற உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதிகளில் பெய்த கனமழையால் அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட  அன்பு நகர், வைஷ்ணவி நகர், ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

மயிலாடுதுறையில் பெய்து வரும் மழை காரணமாக பெரிய கடை வீதி, கூரைநாடு, வண்டிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடைகள் திறக்கப்படாததாலும், பேருந்துகள் சரிவர இயக்கப்படாததாலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனி மூட்டதுடன் கூடிய சாரல் மழை பெய்ததால், மழையில் நனைந்தபடி மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர்.

இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு மழை நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.