தமிழ்நாடு

சிறையில் கம்பி எண்ணும் மாரிதாஸ்... சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் உத்தரவு...

தமிழக அரசு குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில், பிரபல யூடியூபர் மாரிதாஸ்க்கு வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் அவதூறு பரப்பியே புகழ்பெற்ற மாரிதாஸ் என்ற யூடியூபர், தமது சமூக வலைத்தள பக்கங்களில் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ஒரு சில பதிவுகள் கடும் சர்ச்சையை மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் கடும் விவாதங்கள் மற்றும் கருத்து மோதல்களை ஏற்படுத்துகின்றன.

சமீபத்தில் முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் தொடர்பாக ஏன் மீடியாக்களில் விவாதம் நடத்தப்படவில்லை, மு.க.ஸ்டாலின் எங்கே போனார்? என கேள்வி எழுப்பிய மாரிதாஸ், தி.க. மற்றும் தி.மு.க. ஆதரவாளர்கள் பலரும் ராணுவ தளபதி விபத்தில் மரணத்தை கேலி செய்யும் விதமாக பதிவுகள் இடுவதும், பிரிவினைவாத சக்திகளுக்கு தி.மு.க. சிறந்த தேர்வாக இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை எனவும் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், தி.மு.க. ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? எனவும் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், யூடியூபர் மாரிதாஸ் மீது மாநிலத்தின் பொது அமைதியை சீர்குலைத்தல், தமிழக அரசு மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மதுரை மாவட்டம் புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்த போலீசார், மதுரை மாவட்ட 4-வது கூடுதல் நீதிமன்றத்தில் யூடியூபர் மாரிதாஸை ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிபதி சுந்தர காமேஸ்வர மார்த்தாண்டம் உத்தரவிட்டார். இதனையடுத்து பிரபல யூடியூபர் மாரிதாஸ், உத்தமபாளையம் கிளை சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.