தமிழ்நாடு

"தமிழ் நாட்டில் எவ்வாறு பட்டியலினத்தவருக்கு எதிராக வெறுப்பு வளர்கிறது என்பதற்கு இது உதாரணம்" பா ரஞ்சித் ட்வீட்!!

Malaimurasu Seithigal TV

நாங்குநேரியில் 12 ம் வகுப்பு மாணவன் மீது சக மாணவர்கள் நடத்திய வெறித்தனமான தாக்குதலுக்கு இயக்குநர் பா ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதி ரீதியான விரோதம் காரணமாக பிளஸ் 2 மாணவர் மற்றும் அவரது தங்கை ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், இயக்குநர் பா ரஞ்சித் தனது கண்டனத்தை, ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு!  சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே “நாங்குநேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள்" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், "கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒழிக்க ஒன்றிணைவோம்!" என பதிவிட்டுள்ளார்.