தமிழ்நாடு

ஜெய்பீம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக வினர் ஆர்ப்பாட்டம்...சூர்யாவின் உருவ பொம்மை எரிப்பு...

கடலூரில் ஜெய்பீம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் சூர்யாவின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

Malaimurasu Seithigal TV

கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும், இந்த மாதம் 2- ஆம் தேதி வெளிவந்த ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமூகத்தினை இழிவு படுத்தும் விதமான காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக கூறி படத்தில் நடித்திருந்த நடிகர் சூர்யாவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் இன்று கடலூரில் பாமக வினர் திரண்டு வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர் அந்த மனுவில், ஜெய் பீம் படமானது சமூக மோதலை தூண்டும் விதமாக அமைந்துள்ளது, ஆதலால் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஜெய் பீம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது, 

பின்னர் கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதன் பின்னர் திடீரென நடிகர் சூர்யாவின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், பெட்ரோல் ஊற்றி எரித்தும் பாமகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.