தமிழ்நாடு

ஓபிஎஸ் அதிரடி முடிவு? விஜய்யுடன் கைகோர்க்கிறாரா? அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் கொடுத்த அப்டேட்!

அங்கே எந்த வியாபாரமும் நடக்கவில்லை என்றும், அந்த இயக்கம் பலவீனமடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்...

மாலை முரசு செய்தி குழு

தமிழக அரசியல் களத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகளும், கட்சித் தாவல் குறித்த யூகங்களும் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், மதுரை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய நிலை மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அதிமுக-வின் தற்போதைய நிலைப்பாடு குறித்துப் பேசிய ஐயப்பன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்ட இந்த இயக்கத்தில் உள்ள நிர்வாகிகளையும், மூத்த தலைவர்களையும் வெளியே துரத்திவிட்டு, சம்பந்தமில்லாத நபர்களைக் கூட்டணிக்கு வருமாறு கெஞ்சி வருவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சாடினார். நடிகர் விஜய்யைக்கூடத் தங்களது கூட்டணிக்கு வருமாறு அவர்கள் கூவிக்கூவி அழைத்து வருவதாகவும், ஆனால் இதுவரை யாரும் அவர்களுக்குச் சாதகமாக முன்வரவில்லை என்றும் விமர்சித்தார். அதிமுக இரண்டு கடைகளை விரித்து உட்கார்ந்திருந்தாலும், அங்கே எந்த வியாபாரமும் நடக்கவில்லை என்றும், அந்த இயக்கம் பலவீனமடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக மீண்டும் வலிமை பெற வேண்டுமானால், பிரிந்து கிடக்கும் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று ஐயப்பன் வலியுறுத்தினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் அதிமுக-வோடு கைகோர்த்து அந்தத் தேரை இழுத்தால் மட்டுமே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அம்மா ஆட்சியை உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் அதிமுக எப்படிப் பலமான இயக்கமாக இருந்ததோ, அதே போன்ற ஒரு நிலையை மீண்டும் உருவாக்கினால் மட்டுமே தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று அவர் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்குச் செல்லப் போகிறாரா என்ற கேள்விக்குத் பதிலளித்த ஐயப்பன், அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் யாரும் அத்தகைய முடிவை எடுக்கும் சூழ்நிலையில் இல்லை என்று தெளிவுபடுத்தினார். தேர்தல் வர இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், வரப்போகும் தை மாதத்தில் தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்பதைத் தானும் வழிமொழிவதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பேசிய ஐயப்பன், மாநிலத்தில் கஞ்சா புழக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறுவது பொய் என்று குற்றம் சாட்டினார். போதையில் இருந்த ஒரு இளைஞர் காவல்துறையினரையே விரட்டி விரட்டித் தாக்கிய காட்சி ஊடகங்களில் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். இத்தகைய சூழலில் பொதுமக்கள் எப்படிப் பயமின்றி வெளியே வர முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த ஒரு சம்பவமே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதற்குச் சான்று என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். ஒட்டுமொத்தமாக, அதிமுக-வின் ஒற்றுமை மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஆகியவையே 2026 தேர்தலின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று அவர் தனது பேட்டியில் பதிவு செய்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.