பரந்தூர் விமான நிலையம்: "கர்நாடகா, ஆந்திராவுக்கு கொண்டாட்டம்" - முதலமைச்சரின் முடிவுக்கு எதிர்ப்பு ஏன்? 
தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையம்: "ஆந்திரா, கர்நாடகாவுக்கு கொண்டாட்டம்" - முதலமைச்சரின் முடிவுக்கு எதிர்ப்பு ஏன்?

“எந்த ஒரு மாற்றுத் திட்டங்களும் இல்லாமல் எப்படி இதை நிறுத்த முடியும்? தன் காலில் தானே சூடு போட்டுக்கொண்டது அரசு” – சுமந்த் ராமன்

மாலை முரசு செய்தி குழு

சென்னையை அடுத்துள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட்டதாக இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

சென்னையில் இரண்டாவது பசுமைவெளி விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்கும் திட்டத்தை கடந்த திமுக அரசு ஆகஸ்ட் 2022-ல் அறிவித்தது.

அறிவித்தது முதலே இந்தத் திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இது இன்றியமையாதது எனக் கூறி ஆதரவுக் குரல்களும் ஒலித்தன. பரந்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்தத் திட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay

அப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய விஜய், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு எதிர்பார்த்தது போலவே, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பு வெளியானதால், சட்டப்பேரவையில் விவாதம் இல்லாமலேயே திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த முடிவினால் தமிழகத்துக்கு விளைந்திருக்கும் நன்மை, தீமைகள் என்ன என்று பார்க்கலாம்.

விவசாயிகள் கொண்டாட்டம்!

பரந்தூர் விமான நிலையத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் எழ முக்கியக் காரணங்களாகச் சொல்லப்பட்டவை சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதும்தான்.

விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட இருந்த 4,563.56 ஏக்கரில் சுமார் 3,246 ஏக்கர் நிலம் விவசாயம் நடைபெறும் நன்செய் (2,446.79) மற்றும் புன்செய் (799.59) நிலங்களாகும். இங்கு பெருமளவில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்படுவதால், உணவுப் பாதுகாப்பு பற்றிய கேள்விகள் எழுந்தன.

மேலும், இந்த இடத்தில் இருந்த கம்பன் கால்வாய் அழிக்கப்படுவதால், சென்னையில் வெள்ள பாதிப்புகள் அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இத்துடன், அந்தப் பகுதியில் இருக்கும் பல கிராமங்களைச் சேர்ந்த மக்களின் தற்சார்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற அச்சமும் எழுந்தது. விமான நிலையம் கொண்டுவரப்பட்டால், அந்தப் பகுதியில் ஏற்படும் வளர்ச்சியால் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயரும். அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகையை வைத்து அருகாமையில் நிலம் வாங்குவது முடியாத காரியம்.

Chennai Airport

மாற்று நிலம் கொடுக்கப்பட்டாலும், அது அந்த அளவு செழிப்பானதாகவும், விவசாயத்துக்கு உகந்ததாகவும் இருக்குமா என்பது கேள்விக்குறியே!

இதனால், முதலமைச்சரின் இந்த முடிவை பரந்தூர் சுற்றுவட்டார கிராம மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், இதே நேரத்தில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உள்ளவர்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடிக்கொண்டு இருப்பார்கள் என்கிறார் அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன்.

இது பிற்போக்குத்தனமான முடிவு!

முதலமைச்சரின் முடிவு குறித்து நம்மிடம் பேசிய சுமந்த் ராமன், "இது தமிழ்நாட்டை 10 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளக்கூடிய தவறான முடிவு. ஒரு விஷன் இல்லாத அரசின் முடிவு.

எந்த ஒரு தொழிலுக்கும் கனெக்டிவிட்டி மிக முக்கியம். நாம் கடந்த 15 ஆண்டுகளில் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பில் பெங்களூருவை விடப் பின்தங்கிவிட்டோம். இப்போது கொச்சியை விடப் பின்தங்கிவிடுவோம் போலிருக்கிறது.

இது பிற்போக்குத்தனமான முடிவு. விமான நிலையத்துக்காக இரண்டு அரசுகளும் 10 ஆண்டுகள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த இடத்தை முடிவு செய்து, நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளன. இந்த நேரத்தில் எப்படி இதை நிறுத்த முடியும்? அதுவும் எந்த ஒரு மாற்றுத் திட்டங்களும் இல்லாமல்?

விவசாய நிலங்களைக் கையகப்படுத்தாமல் தமிழ்நாட்டில் எப்படி 5,000 ஏக்கர் கிடைக்கும்?

sumanth raman

முதலமைச்சரின் முடிவு தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு சம்மட்டி அடி அடிக்கக்கூடிய முடிவு. தன் காலில் தானே சூடு போட்டுக்கொண்டதைப் போன்றது. ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் இதற்காகப் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள்." என்றார்.

110 விதியின் கீழ் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது அறிவிக்கப்பட்டதாலும், சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானமாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள மறுக்கப்பட்டதாலும், திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர்.

$1.5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைவது எப்படி?

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "2008-ல் நாட்டில் உள்ள விமான நிலையங்களை ஒப்பிடுகையில், பயணிகளின் எண்ணிக்கையில் 3-வது இடத்தில் சென்னை விமான நிலையம் இருந்தது. ஆனால், இப்போது பெங்களூரு விமான நிலையத்துக்கு அடுத்தபடியாக 5-வது இடத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் சரக்குகளைக் கையாளுவது முக்கியம். பெங்களூரு விமான நிலையம் 5.5 லட்சம் டன் கையாளும் அளவு முன்னேறி, மத்திய கிழக்கு நாடுகளுடன் வணிக இணைப்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில்தான் சென்னையின் தொழில் வளர்ச்சிக்கு கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் முக்கியத்துவம் பெறுகிறது. இன்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலைகள் பலவும், விரைவில் அங்கு ஒரு விமான நிலையம் வரும் என்ற அடிப்படையில்தான் அங்கு அமைக்கப்பட்டன. இந்தத் திட்டத்தைக் கைவிட்டிருப்பதால் வரக்கூடிய எத்தனையோ தொழில் வாய்ப்புகளை மறுத்திருக்கிறார்கள்.

சென்னையில் இரண்டாவது விமான நிலையத்துக்கு பல இடங்களைத் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு மேற்கொண்டோம். இறுதியாக, சென்னைக்கு மேற்கே அமைப்பதுதான் சரியாக இருக்கும் என இந்த இடத்தைத் தேர்வு செய்தோம்.

வேறு எங்கு விமான நிலையம் அமைக்க முடியும்? ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்யப் போகிறீர்கள்? அங்கு உள்ள மக்கள் ஏற்கெனவே இழப்பீடு வாங்கிவிட்ட நிலையில், அந்த நிலங்களில் வேறு திட்டங்களை நிறைவேற்றுவீர்களா? அப்படி செய்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதா?

Thangam Thennarasu

அரசியல் காரணத்துக்காக இப்படி ஒரு திட்டத்தை நிறுத்துவது ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். ஏற்கெனவே ஓசூர் விமான நிலையத்தை நாம் இழக்கிறோம். ஆந்திராவில் குப்பத்தில் புதிய விமான நிலையம் வருகிறது. பெங்களூருவில் இரண்டாவது விமான நிலையம் வருகிறது. இப்போது மீண்டும் பரந்தூர் விமான நிலையத்தை இழந்தால், இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றம் எங்கே போகும்? 1.5 டிரில்லியன் டாலர்கள் என்ற பொருளாதார இலக்கை எப்படி அடைய முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்