தமிழ்நாடு

செயல்பாட்டில் இல்லாத சிசிடிவி கேமராக்களை சரி செய்ய கோரிக்கை விடுத்த மக்கள்...!

மாவட்ட காவல்துறையால் ரூ.10 லட்சம் மதிப்பில் நகர் முழுவதும் பொருத்தப்பட்ட 60 சிசிடிவி கேமராக்கள் பழுது..

Malaimurasu Seithigal TV

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றறை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வளர்ந்து வரும் தொழில் நகரமான பல்லடத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி, கோழிப்பண்ணைகள், சாயப்பட்டறைகள், நூற்பாலைகள் ஆகியவற்றில் வட மாநிலங்கள் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், மக்கள் நடமாட்டம் அதிகரித்து, வாகன போக்குவரத்து அதிகமாகி சாலை விபத்துக்களும், வாகன திருட்டுக்களும்,வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. 

இதனையடுத்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு குற்றச்சம்பவங்கள் மற்றும் வாகன விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் தப்பி செல்லும் வாகனங்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க, வாகன திருட்டில் ஈடுபடுவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து பொருட்களை மீட்பது போன்ற காரணங்களுக்காக ரூ.10 லட்சம் மதிப்பில் மாவட்ட காவல்துறை சார்பில்  பல்லடம் நகரம், மக்கள் அதிகம் கூடும் இடமான பேருந்து நிலையம், நான்கு ரோடு சந்திப்பு, பனப்பாளையம் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கபட்டிருந்தன. 

தற்போது பல மாதங்களாகவே இந்த சிசிடிவி கேமராக்கள் இயங்காமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. பழுதடைந்த கேமராக்கள் பராமரிப்பின்றி உள்ளதால் வாகன திருட்டு,கொலை,கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவிட்டதோடு குற்றவாளிகள் எளிதில் தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

இதனால் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் திணறிவருவதாகவும், காணமல் போன பொருட்களை பறிமுதல் செய்வதிலும் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் மக்கள் தொகைக்கேற்ப போலீசார் நியமிக்கபடவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதனால் இனியும் காலதாமதம் செய்யாமல் பல்லடத்தில் செயலிழந்து உள்ள சிசிடிவி கேமராக்களை சரிசெய்து உடனடி பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, குற்றசம்பவங்களை தடுக்க வேண்டும் என்பதே பல்லடம் பகுதி மக்களின்  கோரிக்கையாக உள்ளது.