தமிழ்நாடு

இளைஞனை இருசக்கர வாகனத்தில் நடுவில் அமர வைத்து கடத்திச் சென்ற கல்லூரி மாணவர்கள்...! மடக்கி பிடித்த போலீசார்..!

சென்னை பெரவள்ளூரில் சொந்த பெரியப்பாவே ஆட்களை வைத்து இளைஞனை கடத்த முயன்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது. 

Tamil Selvi Selvakumar

ஜிகேஎம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான பிரசாந்த் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த மர்மநபர் பெட்ரோல் பங்க் வரை செல்ல உதவுமாறு கேட்டுள்ளார். தொடர்ந்து இருவரும் பைக்கில் செல்லவே, பின்னால் வாகனத்தில் சென்ற மற்ற சிலரும் சேர்ந்து பிரசாந்தை கடத்தியுள்ளனர். தனது இருசக்கர வாகனத்திலேயே நடுவில் அமர வைத்து கடத்திச்செல்லப்பட்ட பிரசாந்த், போலீசாரைக் கண்டு குதித்து உதவி கேட்கவே கடத்திய நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒன்றரை ஆண்டுக்கு முன் பெரியப்பா சிவகுமார் வீட்டில் பிரசாந்த் தங்கியிருந்ததும், அவரின் 20 லட்ச ரூபாய் பணத்தை எடுத்ததாக இருவருக்கும் தகராறு நீடித்து வந்ததும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரத்தில் இருந்த பெரியப்பா, வழக்கறிஞர் கார்த்தியுடன் சேர்ந்து கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 4 பேரை ஏவி பிரசாந்தை கடத்தி பணத்தை திருப்பித் தருமாறு மிரட்டியதும் தெரிய வந்தது.