தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு மீண்டும் ஓகே சொன்ன நீதிமன்றம்...போட்ட கண்டிஷன் என்ன?

Tamil Selvi Selvakumar

நவம்பர் 6ம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ...

காந்தி ஜெயந்தியன்று தமிழகம் முழுவதும் 51 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் தமிழக காவல்துறையிடம் முறையிடப்பட்டது. தமிழக காவல்துறை அனுமதியளிக்காத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 2ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. 

இதனிடையே, பிஎஃப்ஐ அமைப்பின் தடையை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற களேபரங்கள், மற்றும் விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் போட்டி பேரணி அறிவிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அக்டோபர் 2ம் தேதி பேரணி நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அக்டோபர் 2ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6ம் தேதி பேரணியை நடத்திக் கொள்ள ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் நவம்பர் 6தேதி பேரணி நடத்த அனுமதி வழங்குமாறும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும் காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது