தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நிபந்தனையுடன் அனுமதி! பொதுமக்களுக்குத் தடை?

போதிய பாதுகாப்பு வழங்கவும், தேவைப்பட்டால் CISF படையை நிறுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

Muthu Lakshmi, Mahalakshmi Somasundaram

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில், வரும் (நவ 24) ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயம், இந்த அனுமதி குறிப்பிட்ட ஒரு நாளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வழக்கின் இறுதி முடிவாக இதைக் கருத முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருநாளன்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோரி ராம. ரவிக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்குப் பதிலாக, வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு, கடந்த 2026-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது.

இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, கோவில் நிர்வாகம் மற்றும் தர்கா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேவேளையில், கார்த்திகை தீபத் திருநாளன்று பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என மூல மனுதாரர் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. கடந்த சில நாட்களாக நடைபெற்ற விசாரணையில், தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், தர்கா நிர்வாகம் உள்ளிட்ட தரப்பினர் தங்களது வாதங்களை முன்வைத்தனர். தீபத்தூணில் தீபம் ஏற்றுவது பாரம்பரிய நடைமுறை அல்ல என்றும், இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று (நவம்பர் 20) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் வரும் நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று மட்டும் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது இடைக்கால உத்தரவு மட்டுமே என்றும், வழக்கின் இறுதி முடிவு அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கின் விசாரணைக்காகக் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு 6 வார கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், கார்த்திகை தீபத் திருநாளைத் தவிர மற்ற நாட்களில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீபம் ஏற்றுவதற்காக கோவில் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே மலைக்குச் செல்ல வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு மலை உச்சிக்குச் செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபம் ஏற்றும் நிகழ்வுக்குப் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், தேவைப்பட்டால் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் (CISF) உதவியையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், வரும் நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த இடைக்கால உத்தரவு வெளியாகியுள்ள நிலையில், வழக்கின் இறுதி விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்