சென்னை விமான நிலையத்திற்கு மொரிசியஸ் நாட்டில் இருந்து மொரிசியஸ் விமானம் 286 பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. விமானத்தில் மொரிசியஸ் நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணா (60) என்பவர் ரத்த புற்று நோய்க்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறுவதற்காக அவரது மனைவியுடன் வந்து கொண்டு இருந்தார். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென கிருஷ்ணாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, உடல்நிலை மோசம் அடைந்தது. உடனடியாக அவருடைய மனைவி கதறி அழுது மருத்துவ உதவி கேட்டுள்ளார்.
இதையடுத்து விமான பணிப்பெண்கள் அவசரமாக, விமானிக்கு தகவல் தெரிவித்ததோடு, விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த மருத்துவர்கள் அவசர முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் கிருஷ்ணா, மயக்க நிலையை அடைந்தார். இதற்கு இடையே விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, பயணி ஒருவருக்கு, அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுவதால், விமான நிலைய மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்கும்படியும், விமானம் தரையிறங்குவதற்கு, முன்னுரிமை அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து ஏர் மொரிசியஸ் விமானம் சுமார் 20 நிமிடங்கள் முன்னதாக தரையிறங்கியது.
உடனடியாக தயார் நிலையில் இருந்த, சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர், விமானத்துக்குள் அவசரமாக ஏறி, பயணியை பரிசோதித்தவர். ஆனால் பயணி விமானத்திற்குள் இருக்கையில் உயிரிழந்த நிலையில் இருந்தார். கிருஷ்ணா, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மனைவி விமானத்துக்குள் கதறி அழுதார். சக பயணிகள் சோகத்தில் மூழ்கினர்.
சென்னை விமான நிலைய போலீசார், உடனடியாக விரைந்து வந்து, உயிரிழந்த பயணி கிருஷ்ணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விமானத்துக்குள் பயணி உயிரிழந்து விட்டதால், விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின்பே, மீண்டும் விமானத்திற்குள், பயணிகளை ஏற்ற வேண்டும் என்று விமானி கூறிவிட்டார். இதையடுத்து ஏர் மொரிசியஸ் ஏர்லைன்ஸ் விமானம் முழுமையாக சுத்தப்படுத்தும் பணி நடந்தது. அதன்பின்பு சென்னையிலிருந்து மொரிசியஸ் செல்ல இருந்த, 280 பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டனர். ஏர் மொரிசியஸ் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.