பரபரப்பான தமிழக அரசியல் களத்தில், நடிகர் இளவரசு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய வீடியோ ஒன்று பேசு பொருளாகி உள்ளது. கடந்த மாதம் ஜூன் 10 தேதி உயிரிழந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் படங்கள் மற்றும் சினிமாவில் அவர் அறிமுகம் செய்த கருத்தியல் குறித்து சிறப்பு விவாதம் ஒன்று நடந்தது. அதில் கலந்து கொண்டு பாரதிராஜா அவர்களின் திரைப்படம் மற்றும் அவருடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் சுவாரசிய கலந்துரையாடல் நடத்தினர். அதில் கலந்து கொண்ட நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு, இயக்குனர் பாரதிராஜா மற்றும் அவரது திரைப்படங்கள் குறித்து முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.
அதில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘என் உயிர்த் தோழன்’ (1990) மற்றும் ‘நிழல்கள்’ (1980) ஆகிய படங்கள் பேசிய சமூக கருத்தியல் மற்றும் அரசியல் குறித்த கருத்தை பதிவு செய்திருந்தார். அவர் பேசியதாவது, “என் உயிர்த் தோழன் எனும் படத்தில் இன்றைய இளைஞர்கள்.. நீங்க வலதுசாரி அல்லது இடது சரியாக என்பதை நீங்கள் பகுத்தறிந்து முடிவு செய்துகொள்ளலாம். தமிழ் நாட்டின் வரலாற்றிலையே இந்த ‘பிடித்த அரசியல்’ எனும் அரசியலால் ‘கருத்தியல் அரசியல்’ தோற்றுக் கொண்டே இருக்கிறது. அப்படி இருக்காதிங்கனு எடுக்கப்பட்ட படம் தான் இது. கண்மூடித்தனமா யாரு மேலயும் நம்பிக்கை வச்சு அனாதையா போய்டாதீங்க, உங்களை கொன்று கூட அவன் வெற்றியை தேடுவான்.. என்பது தான் ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் சொல்லப்பட்ட மிக சிறந்த அரசியல். அது எல்லா காலகட்டத்திற்கும் எவர்கிரீன் மூவி” என்றும் பேசியிருந்தார். இது தற்போது அரசியல் சூழலுக்கு ஒற்று போவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்கள் இல்லுசனில் இருக்காதிங்க, இல்லுசனில் இருந்தால் எங்கே போய் முடியும் என்று தெரியாது. இளமை ரத்தம் நமக்கு ரொம்ப நாள் இருக்காது. இளமை என்பது நிரந்தரம் இல்லை, கற்பனையில் வாழ்ந்தால் தோற்று விடுவாய். உளவியல் ரீதியாக உன்னை தக்க வைத்து கொள்ள வேண்டுமெனில் பகுத்தறிந்து வாழ்” என்று இளைஞர்களுக்கு அரசியல் மற்றும் வாழ்வியல் குறித்த கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, நெட்டிசன்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களின் தாக்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் அங்கே கருத்தியல் அரசியல் செயல்படவில்லை என்றும், ரசிக அரசியலே வென்றுள்ளதாகவும் இந்த வீடியோவை மேற்கோள் காட்டி பேசி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.