தமிழ்நாடு

வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சி - நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

கரூர் வந்தடைந்த வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நகரும் புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டார். 

Malaimurasu Seithigal TV

கப்பலோட்டிய தமிழன்" வ. உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான "நகரும் புகைப்படக் கண்காட்சி" வடிவமைக்கப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புகைப்படக் கண்காட்சி, குளிரூட்டப்பட்ட அரசு பேருந்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி வாகனத்தில், வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கைக்குறிப்பு, சுதந்திரப் போராட்டத்தில் அவர் செய்த தியாகங்கள், ஆங்கிலேயரால் அவர் அனுபவித்த கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் செய்திகளாகவும், அரிய புகைப்படங்களின் தொகுப்புகளாகவும், இடம்பெற்றுள்ளன. நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனம், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளது. அந்த வகையில், கரூர் வந்தடைந்த இந்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தை, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டார். கரூர் மாவட்டத்தில் 3 நாட்கள் இருக்கும் இந்த வாகனம், 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், வருவாய் கோட்டாட்சியர் சுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.