தமிழ்நாடு

தை கிருத்திகையையொட்டி தமிழகம் முழுவதும் நடைபெற்ற திருத்தேரோட்டம்...!

Tamil Selvi Selvakumar

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் தை கிருத்திகையை ஒட்டி திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 3 ஆண்டுகளுக்கு பின், தை தெப்பத் திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் 9-ம் நாள் விழாவில், தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் தை கிருத்திகையை முன்னிட்டு, ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு, பக்தர்கள் 251 புஷ்ப காவடி ஏந்தி திட்டு வாசல் வழியாக நான்கு மாட வீதிகளை சுற்றி வலம் வந்தனர்.  மேள வாத்தியங்கள் முழங்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவடி ஏந்தி பக்தி பரவசத்துடன் நடனமாடி வழிபட்டனர். 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் வந்து சேர்ந்தன. 291 சர்க்கரை காவடியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குன்றக்குடியில் இருந்து 19 நாட்கள் பயணமாக புறப்பட்டு சிங்கம்புணரி வந்தடைந்தனர். 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய நகரத்தார் காவடியில், ஏராமளான பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.