கந்தர்வகோட்டை பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடவும், பராமரிக்கவும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, கந்தர்வகோட்டை தொகுதிக்குள் செல்லும் நெடுஞ்சாலை துறையின் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடவும், பராமரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்குமா? என கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாநில நெடுஞ்சாலைகள் 33 கிலோமீட்டர், முக்கிய சாலைகள் 115 கிலோ மீட்டர் என மொத்தமாக 432 கிலோமீட்டர் சாலைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பாக கந்தர்வகோட்டை பகுதியில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், கந்தர்வகோட்டை தொகுதிக்குள் செல்லும் நெடுஞ்சாலையில் 2,050 மரங்கள் உள்ளதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,762 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும், மொத்தமாக 40,700 மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
மேலும், ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்றுகளை நட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து மரக்கன்றுகள் கொண்டுவரப்பட்டு 6 அடிக்கு மேல் உள்ள மரக்கன்றுகள் தான் நெடுஞ்சாலை ஓரங்களில் நடப்பட்டு வருவதாகவும், கந்தர்வகோட்டை தொகுதிக்குள் செல்லும் நெடுஞ்சாலை துறையின் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடவும் பராமரிக்கவும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.