தமிழ்நாடு

பிரதமர் மோடியின் சென்னை பயணமும்... திட்ட விவரங்களும்...!!!

Malaimurasu Seithigal TV

சென்னை விமான நிலையம் திறப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட விழாக்களில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ளதை தொடர்ந்து அவரது பயணத்திட்ட விவரம் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் பிரதமர் மோடி, அங்கு புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.  இதன்மூலம் விமான நிலையத்தில் பயணிகளை கையாளும் திறன், ஆண்டுக்கு 23 மில்லியனில் இருந்து 30 மில்லியனாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு விமானதளத்திற்கு செல்லும் பிரதமர், சாலை மார்க்கமாக மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைகிறார்.  அங்கிருந்து சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்சேவையை பிரதமர்  கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.

மேலும் தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரத்திற்கு 3 முறை இயக்கப்படும்  ரயில் சேவையையும் , திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையேயான அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கவுள்ளார்.

மதுரை செட்டிகுளம் பகுதியில் நத்தம் - துவரங்குறிச்சி இடையேயான 4 வழிச்சாலை திட்டத்தையும் போக்குவரத்திற்காக திறந்து வைக்கிறார்.  திருமங்கலம் - வடுகப்பட்டி இடையேயான 4 வழிச்சாலை மற்றும் வடுகப்பட்டி - தெற்கு வெங்கநல்லூர் இடையேயான 4 வழிச்சாலை திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திருந்து சாலை வழியாக மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லம் சென்று, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு சனிக்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து ஐஎன்எஸ் அடையாறு விமான தளத்திற்கு செல்லும் பிரதமர், ஹெலிகாப்டர் மூலம் பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானத்திற்கு மாலை 6:30 மணிக்கு செல்கிறார்.

அங்கு, முடிவுற்ற சாலைப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், பல்வேறு புதிய சாலைத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.  இதைத்தொடர்ந்து பல்லாவரம் அல்ஸ்டோம் கிரிக்கெட் மைதானத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்புடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.  இந்நிகழ்வில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதையடுத்து சென்னை விமான நிலையம் சென்று, இரவு 8.45 மணிக்கு தனி விமானம் மூலம் மைசூர் செல்கிறார்.  பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் 22 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.  சென்னை விமான நிலையம் , சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், பல்லாவரம் கிரிக்கெட் மைதானம் உட்பட பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.