pmk internal clash  
தமிழ்நாடு

இரண்டாக உடைந்தது பாமக! இனி யார் கை ஓங்கியிருக்கும்!? -குழப்பத்தில் தொண்டர்கள்..!

செயல் தலைவர் என்ற பதவி இனி இருக்கும் . ஆனால் அந்தப் பதவியில் இருந்த அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் வேறு நபர் ...

மாலை முரசு செய்தி குழு

பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையில் மோதல் நிலவி வந்தது, தமிழ்நாடே அறிந்த ஒன்று.. இந்த சூழலில் அன்புமணி பாமக -விலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரின் செயல்தலைவர் பதவி மட்டுமல்லாது, அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. அந்த 19 குற்றச்சாட்டுகளும் உண்மை. இதற்காக இரண்டு முறை கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தவிர்த்திருக்கிறார். நேரிலும் வரவில்லை. கடிதமும் தரவில்லை. தொலைபேசி மூலமும் அழைக்கவில்லை.  இந்த சூழலில் அவர் பதிலளிக்க வேண்டிய நேரம் முடிவடைந்ததால், கட்சி விரோத செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவரை செயல் தலைவர் பதவியிலிருந்து நீக்குகிறேன். மேலும் கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததால், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குகிறேன்” என அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  “செயல் தலைவர் என்ற பதவி இனி இருக்கும் . ஆனால் அந்தப் பதவியில் இருந்த அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் வேறு நபர் நியமிக்கப்படுவார். அன்புமணியிடம் எத்தனையோ மூத்தவர்கள் சென்று அப்பாவின் சொல்லை கேட்டு நடந்துகொள்ளுங்கள் என்று சொன்னபோதும் கூட அவர் யார் பேச்சையும் கேட்கவில்லை. அவர் அரசியலுக்கு தகுதியற்றவர். நான் 46 ஆண்டுகாலம் ஓடி ஓடி உழைத்து, 96 ஆயிரம் கிராமங்கள் நடந்து சென்று உருவாக்கிய கட்சி. பாமக -வின் எந்த திட்டத்துக்கும் அன்புமணி ஆதரவு இல்லை. அதனால்தான் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார். அவருடன் பாமக -வினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது” என பேசியிருந்தார்.

எனது பெயரை பயன்படுத்தக் கூடாது!

தொடர்ந்து பேசிய நிறுவனர், “டாக்டர் அன்புமணி தனக்கு தேவை என்றால், தனியாக கட்சி ஆரம்பித்துக்கொள்ளலாம், என்ன இவர் திடீரென இப்படி சொல்கிறாரே என்று நினைக்க வேண்டாம். நான் ஏற்கனவே மூன்று முறை சொல்லிவிட்டேன். மீண்டும் சொல்லுகிறேன் தனியாக கட்சி ஆரம்பித்து கொள்ளவும். இது தனி ஒரு மனிதன் ராமதாஸ் ஆரம்பித்த கட்சி.  இதில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை யாரும். இதில் உரிமை கோரவும்  முடியாது. இன்று முதல் எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது. ‘இரா’ என்ற இனிஷியல் தவிர, ராமதாஸ் என்ற பெயரை அவர் பயன்படுத்தக் கூடாது. ஒருவழியாக கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த களையை நீக்கி விட்டேன். பாட்டாளி மக்கள் கட்சிக்கு இது எந்த வகையிலும் பின்னடைவு இல்லை. இது ஒரு களை எடுப்பு நடவடிக்கை மட்டுமே. கட்சியிலிருந்த களை தற்போது நீக்கப்பட்டுவிட்டது. அவருடன் இருக்கின்ற நிர்வாகிகள் மற்றும் பிள்ளைகள் கவனத்திற்கு. அவர் கட்சி துவங்கினாலும் அந்த கட்சி வளராது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என பேசியிருந்தார்.

இனி நடக்கப்போவது என்ன?

பல நாட்கள் பாமக -வில் நிலவி வந்த இழுபறியான சூழல் ஓரளவு ஒரு வடிவத்திற்கு வந்துள்ளது. இது ஒரு முடிவோ தீர்வோ அல்ல. இனிதான் உண்மையான சிக்கல்கள் துவங்க உள்ளன. மக்கள் ஏற்கனவே நம்பிக்கையற்ற ஒரு நிலையில்தான் இருக்கின்றனர். இது கட்சிக்குள்ளும் வன்னியர் சமூகத்துக்குள்ளும் பெரும் குழப்பத்தை உண்டு பண்ணும். கட்சி தற்போது இரண்டாக உடைந்துள்ளது என்பது உண்மை. ஆனால் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் அன்புமணி பக்கம் தான் நிற்கின்றனர். 

மேலும் தேர்தல் ஆணைய பதிவுகளின்படி அன்புமணிக்கு பாமக -வில் பொறுப்புகள் உண்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால் நிறுவனர் ராமதாஸ் இன்று அந்த கூற்றுகள் எல்லாம் ‘பொய்யானவை’ என சொல்லியிருக்கிறார். ஒருவேளை ராமதாஸ் சொல்லுவது உண்மையானால், இது அன்புமணிக்கு பெரும் சறுக்கல்தான். அதுவும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணி அமைப்பதில் பெரும் சிக்கல் உருவாகும். அதேவேளையில் அன்புமணி பாஜக -வில் இணைவார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ராமதாஸ் எந்த கூட்டணியை தேர்வு செய்வார் என்பதும் இப்போதைக்கு தெரிய வாய்ப்பில்லை. கூட்டணி பேரம் பேசும்போதும் இம்முறை பாமக -வின் குரல் ஓங்கியிருக்க வாய்ப்பு இல்லை. இந்த விவகாரம் அடுத்ததாக தேர்தல் ஆணையத்திற்கு செல்லும், நீதிமன்றத்திற்கு செல்லும். அந்த தீர்வை நோக்கி நகரும்போது தந்தை - மகன் இருவருக்குமே சிக்கல்தான். எனவே பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான முடிவை எட்ட முயல் வேண்டும் என்கின்றனர் ஆர்வலர்கள்…

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.