தமிழ்நாடு

அரசியல் பணி என்பது மக்களுக்கான பணியாக இருக்க வேண்டும்...அரங்கநாயகம்!!

Malaimurasu Seithigal TV

அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரங்கநாயகத்தின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்தில் அரங்கநாயகத்தின் திருவுருவ படத்திற்கு அவரது மகள் பாவை மலர் மற்றும் மருமகன் ராஜா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் இல்லத்தில் அமைந்திருக்கக் கூடிய பள்ளியில் உள்ள செவித்திறன் குறைபாடு மற்றும் வாய் பேச முடியாத மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி அவர்களுடன் அமர்ந்து தானும் உணவருந்தினார்கள்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரங்கநாதனின் மருமகன் ராஜா, அதிமுக கட்சி தொடங்கிய போது முதல் முதலில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கோவை மேற்கு பகுதியில் போட்டியிட்டு அதிமுக சார்பில் முதல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அரங்கநாயகத்தின் 92வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது எனக் கூறினார்.  

மேலும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் காவலனாகவும் முதல் முதலில் கிராமப்புறங்களுக்கு உயர்கல்வியை கொண்டு சேர்த்தார் என்ற பெருமையும் உடையவர் எனவும் தெரிவித்தார்.  அதனைத் தொடர்ந்து அகில இந்திய அளவில்  தொழில் கல்வி முதல் இடத்தில் தற்போது  இருப்பதற்கு அச்சாணியாக இருந்தவர் எனவும் கூறினார்.  மேலும் மக்கள் பணியில் எம்ஜிஆர் எப்படி இருந்தாரோ அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்காக வழங்கியதைப் போல அரங்கநாதனும் அதற்கு சான்றாக இருந்தார் எனவும்,  அரசியல் பணி என்பது மக்களுக்கான பணியாக இருக்க வேண்டும் என்று தற்போது அரசியலில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் மற்றும் நிறுவனர் ராகம் சௌந்தர பாண்டியன் கலந்து கொண்டார்.