தமிழ்நாடு

"அரசியல்வாதிகள் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" உயர் நீதிமன்றம் அறிவுரை!

Tamil Selvi Selvakumar

அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக  பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், சுயநலனுக்காக பிரச்னைகளை உருவாக்கி பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.

சென்னை, தியாகராய நகரில் உள்ள அப்துல் அஜிஸ் தெருவில் உள்ள கிரிஜா என்ற மூதாட்டி வீட்டில் வசித்து வந்த திமுக-வை சேர்ந்த வட்டச் செயலாளர்  ராமலிங்கம், 2017 முதல் வாடகை தராததால் வீட்டை காலி செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனாலும் ராமலிங்கம் வீட்டை காலி செய்யாததால், வட்டச் செயலாளருக்கு எதிராக கிரிஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த  நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 48 மணி நேரத்துக்குள் காவல்துறையினரை அனுப்பி, கிரிஜாவின் வீட்டில் இருந்து ராமலிங்கத்தை வெளியேற்றி, அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார். 
 
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ராமலிங்கம் வீட்டை காலி செய்து விட்டதாகவும், வீடு தற்போது உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  இதை ஒப்புக்கொண்ட கிரிஜா தரப்பில், வாடகை பாக்கி இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, அரசியல்வாதிகளின் வார்த்தைகள் மற்றும் செயல்கள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் மிகப்பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அவர்கள்  பொதுமக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய வகையில் அவர்களை நல்வழியில் நடத்த வேண்டுமென நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

 அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தின் மூலம் பொதுமக்களை மிரட்டுவதையும் அவர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்துவதையும் நீதிமன்றம் கைகட்டி வேடிக்கை பார்க்காது  என தெரிவித்துள்ள நீதிபதி, அரசியல் வாதிகள், தங்கள் அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, சுயநலனுக்காக பிரச்னைகளை உருவாக்க பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

நில அபகரிப்பு என்பது அப்பட்டமான பகல் கொள்ளை எனக்  குறிப்பிட்ட நீதிபதி, வாடகை பாக்கியை வசூலிப்பதை பொறுத்தவரை, மாவட்ட ஆட்சியர், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.