தமிழ்நாடு

பொங்கல் பரிசாக வெளியாகிறது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்?..

குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து வரும் பொங்கல் தினத்தன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்திருக்கிறது திமுக. அதில் தேர்தல் அறிக்கையில்  குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பெண்களும் தங்கள் வாக்குகளை திமுகவுக்கு அளித்தனர்.திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கொரோனா நிவாராணம் ரூ.4000, ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை தொடங்கியது. எனினும் குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் குறித்து இதுவரை எவ்வித தகவலும் அறிவிப்பும் வெளிவரவில்லை.

இந்த திட்டம் முதல் நாளே முதல்வரின் கையெழுத்துடன் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அப்போதும் தொடங்கப்படவில்லை.அமைச்சர்களை பொறுத்தவரை இந்த திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும் என்று அவ்வப்போது செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் கூறி வருகின்றனர்.

 இந்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான அறிவிப்பு வருகிற ஜனவரி மாதம் வெளியாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் அடுத்தாண்டு ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கூடவுள்ளது. இந்த கூட்டத்தொடரி நேரடியாக ஒளிபரப்பு செய்யும் முடிவில் தமிழக அரசு உள்ளது. ஒரு வாரம் வரை கூட்டத்தொடரை நடத்தி விட்டு, பொங்கலுக்கு முன்பாக நிறைவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இந்த கூட்டத்தொடரில் அநேகமாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.