தமிழ்நாடு

"விழுப்புரம்-ன்னா அது பொன்முடி தான்"! - ஒற்றை ஆளுக்காக கூடிய கூட்டம்! - மீண்டும் பதவி ஏற்கிறாரா பொன்முடி!?

தொடர்ந்து நீடிக்காவிட்டாலும், விழுப்புரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார்

Mahalakshmi Somasundaram

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்,  “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்திப்பார்கள் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

இதன் தொடக்க நிகழ்வாக மாநிலம் முழுவதும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என பலரும் செய்தியாளர்களை சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்து விளக்கமளித்துள்ளனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடியின் தலைமையில் நடைபெற்று முடிந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் பொன்முடி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 

இதற்கு முன்னால்,பொன்முடி பொதுக்கூட்டங்களில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதால் திமுக துணை பொதுச்செயலாளர் என்ற அதிகாரமிக்க பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். மேலும் செம்மண் அள்ளிய வழக்கில் முறைகேடு நடந்திருப்பதாக, அமலாக்கத்துறை இவர் மீது வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அமைச்சர் பதவியையும் பொன்முடி ராஜினாமா செய்திருந்தார், அடுத்ததடுத்து பொன்முடி மீது புகார்கள் எழுந்த நிலையில் திமுக தலைமை இவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது. 

இவ்வாறாக பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாலும், கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஆர்வத்துடனும், வீரியத்துடனும் கலந்து கொண்டு வந்துள்ளார். அமைச்சர் பதவியில் இவர் தொடர்ந்து நீடிக்காவிட்டாலும், விழுப்புரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். இதனை திமுகவின் தலமையும் தொடர்ந்து கவனித்து வந்துள்ளது.  

இந்த நிலையில் தான் பொன்முடியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை சுட்டிக்காட்டி “பொன்முடி பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விழுப்புரம் மாவட்டத்தின் திமுக முகமாக எப்போதும் பொன்முடி தான் இருப்பார்” என்ற கருத்தை  திமுக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். மீண்டும் பொன்முடிக்கு கட்சி ரீதியாக பெரிய பொறுப்பு கொடுக்கப்பட உள்ளதாகவும்,  தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளால் பின்னடைவை பொன்முடி சந்தித்திருந்தாலும், முதலமைச்சர்  ஸ்டாலினிடம், அவர் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட நிலையில், விரைவில் திமுகவில் உயர்மட்ட பொறுப்பிற்கு பொன்முடி செல்லவுள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.