நேற்று கங்கைகொண்ட சோழபுரம், முப்பெரும் விழாவில் பிரதமர் கலந்துகொண்டு பேசினார். அதில் அவர் பேசிய வார்த்தைகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரி வந்த பிரதமர் அங்கிருந்து சாலைமார்க்கமாக ரோடு ஷோ சென்று மக்க்களை சந்தித்தார்.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கோயில் வளாகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் தேவார திருவாசக பதிகங்களை பாடினர். இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது.
விழா மேடையில் பிரதமர் மோடியுடன் தமிழ் நாடு அரசு சார்பில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் சிதம்பரம் எம்.பி. திருமாவளவன், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
மோடி என்ன பேசினார்!?
தமிழில் வணக்கம் சொல்லி உரையை துவங்கிய பிரதமர், இன்று கார்கில் வெற்றித்திருநாள் இன்று நான் கார்கில் வீரர்களுக்கு தலை வணங்குகிறேன், ‘வணக்கம் சோழ மண்டலம்’ என்று தொடங்கிய பிரதமர், ‘நமசிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்ற திருவாசகத்தை மேற்கோள் காட்டி தமிழில் பேசினார்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் 140 கோடி மக்கள் நலனுக்காக இக்கோயிலில் எனது வேண்டுதலை முன்வைத்தேன். ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனும் இந்தியாவின் முக்கியமான அடையாளம். சோழரசின் வரலாறு மற்றும் பாரம்பரியம் நாட்டின் வலிமையை காண்பிக்கிறது. சோழர்களின் காலம் இந்திய வரலாற்றில் பொற்காலமாகும். ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், உலகம் முழுவதும் கட்டிடக் கலையின் அதிசயமாக உள்ளது. சோழர்களின் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார வளர்ச்சி, தற்போதும் நமக்கு இப்போதும் ஊக்கமாக இருக்கிறது. ராஜராஜ சோழன் சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். ராஜேந்திர சோழர் அதை மேலும் வலுப்படுத்தினார். சோழர்கள் இலங்கை, மாலத்தீவுகள், தென்கிழக்காசிய நாடுகளுடன் தூதரகம் மற்றும் வர்த்தக உறவுகளை வளர்த்தனர். அன்று ராஜேந்திர சோழன் மாலத்தீவு சென்று வந்தார். நான் இரு தினங்களுக்கு முன்பு மாலத்தீவு சென்று வந்தேன்.
ராஜேந்திர சோழன் கங்கை நீரை பொன்னேரியில் ஊற்றினார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், காசியில் இருந்து கங்கை நீர் தற்போது மீண்டும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு கொண்டுவரப்பட்டது என பேசியிருந்தார்.
இந்நிலையில் இவரின் பேச்சுகுறித்து தனியார் தொலைக்காட்சியில் நேரலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அரசியல் விமர்சகர், “நீங்கள் ராஜ ராஜ சோழனையும் ராஜேந்திர சோழனையும் போற்றி புகழுகிறீர்கள், சரி… ஆனால் வரலாற்றில் பொற்காலம் என்று வருணிக்கப்ட்ட ஆட்சிக்காலத்தில் இருந்த விஷயங்களை இப்போது செய்கிறீர்களா? என்றால் அது கேள்வி குறிதான். “மணிப்பூரில் நிர்வாணமாக்கி பலாத்காரம் செய்யப்பட்டார்களே அவர்களும் இதில் அடங்குவார்களா? இவை ஏதும் இல்லாமல் வெறும் ஓட்டுக்காக மட்டுமே இங்குள்ள தெய்வங்களையும், அரசர்களையும் பயன்படுத்திக்கொள்வது மிகவும் மோசமான ஒரு விஷயம்.
ஆகவே இவர்கள் சோழர்களை கையிலெடுப்பதன் பின்னணியில் ஓட்டுதான் உள்ளது. அவர் பேசும்போது சொல்கிறார் இல்லையா? “ 140 கோடி மக்களுக்கு சேர்த்து சிவனிடம் வேண்டிக்கொள்கிறேன் என்கிறார் இல்லையா, அந்த 140 கோடி பேரில் இஸ்லாமியர்களின் நிலை என்ன?, தலித்துகளின் நிலை என்ன? எவ்வளவு அச்சத்தோடு இஸ்லாமியர்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள், என்பது நாடறிந்த உண்மை. சிவனாகவே பிரதமர் தன்னை நினைத்துக்கொள்கிறார் என்பதையே இது காட்டுகிறது.”
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.