தமிழ்நாடு

” கடைசி நேரத்தில் என் மகனிடம் பேசக்கூட முடியல”குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் தாய் கதறிய சோகம்...

கடைசி நேரத்தில் தன் மகனிடம் பேசக்கூட முடியவில்லை என துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் தாய் கதறிய நிகழ்வு காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

Malaimurasu Seithigal TV

புதுக்கோட்டை நார்த்தமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், போலீசார் பயிற்சி மேற்கொண்ட போது தவறுதலாக குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்த சிறுவன், தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்த நிலையில், சிறுவனின் இறப்புக்கு நீதிகேட்டு மருத்துவமனை முன்பு பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தங்களது மகனை காப்பாற்றி விடுவோம் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்த நிலையில் அவன் உயிரிழந்துவிட்டதாக வேதனை தெரிவித்தனர். மேலும் தங்களது மகன் இறப்புக்கு காரணமான துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் கடைசி நேரத்தில் தன் மகனிடம் பேசக்கூட முடியவில்லை எனவும் கவலை தெரிவித்தனர்.

இதனிடையே உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விசாரணை முடிவில் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.