தமிழ்நாடு

புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு... அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராக பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

Malaimurasu Seithigal TV

அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

அந்த அறிக்கையில் கூறிய காரணம், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை  அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.  இதில் ஆஜராக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடரலாம் என்றும், இருவரும் ஆஜராக விலக்கு அளித்தும், வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்தில் விலக்கு பெற்றதால் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 16ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.