10 PM to 6 AM train rule 
தமிழ்நாடு

"இனி ரயிலில்.. குறிப்பிட்ட நேரம்தான் தூங்கணும்" - சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன முக்கிய விளக்கம்! யாருக்கெல்லாம் இதில் விலக்கு?

மனுதாரர் உதவிக்காக, ரயில்வே போலீசார் அல்லது ரயில்வே ஊழியர்களை அழைத்திருக்கலாம் ஆனால், மனுதாரர் அவ்வாறு செய்யாமல் இந்த விதியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Vinvizhi Leninton

ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட படுக்கையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்க அனுமதி என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த uஉயரங்கும் நேரத்திற்கான உத்தரவை ரத்து செய்யவேண்டி மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

ரயில்களின் நடு மற்றும் கீழ் படுக்கைகளில் பயணிகள் அதிக நேரம் உறங்குவதால் அடிக்கடி ஏற்படும் சண்டைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இந்திய ரயில்வே முன்பதிவு செய்யப்பட்ட படுக்கையில் உறங்குவோரின் நேரத்தை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே என்று 2017ம் ஆண்டில் மாற்றியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், உறங்கும் நேரம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இருந்த நிலையில் அது 2017-ல் குறைக்கப்பட்டது. இருப்பினும், உடல்நிலை பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டது.

தற்போது, இந்த உத்தரவினை ரத்து செய்யக்கோரி பாலசுப்பிரமணியன் என்ற மனுதாரர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். சென்னையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் உடல்நலம் சரி இல்லாத தனது மனைவியுடன் ரயிலில் பயணம் செய்திருக்கிறார். அப்போது முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்கவேண்டும் என்ற உத்தரவினை காரணம் காட்டி பாலசுப்ரமணியனின் மனைவியின் படுக்கையை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 2017-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவினை ரத்து செய்யக்கோரி பாலசுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தினை நாடியுள்ளார். இந்த வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி, முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை உறங்கவேண்டும் என்ற உத்தரவு அமலில் இருந்தாலும் கூட கர்ப்பிணிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோர் எந்தநேரத்திலும் உறங்க அனுமதிக்கப்படுவார்கள், அதற்கு அனுமதி உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், மனுதாரர் உதவிக்காக, ரயில்வே போலீசார் அல்லது ரயில்வே ஊழியர்களை அழைத்திருக்கலாம் ஆனால், மனுதாரர் அவ்வாறு செய்யாமல் இந்த விதியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த வழக்கினை முடித்துவைத்த நீதிபதிகள் மனுதாரர் ரயில்வே நிர்வாகத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.