ராஜ்மோகன் vs காங்கிரஸ்: 'ஞானேஷ் குமார்' ராஜினாமா.. திசை திருப்பும் அரசியல் செய்வது யார்? 
தமிழ்நாடு

ராஜ்மோகன் vs காங்கிரஸ்: 'ஞானேஷ் குமார்' ராஜினாமா.. திசை திருப்பும் அரசியல் செய்வது யார்?

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ராஜ் மோகன் தான் SIR குறித்த கருத்தை காங்கிரசைப் பொறுத்து சொல்ல வில்லை என்றும் காங்கிரஸ் தவெக இரண்டும் இரண்டு குழல் துப்பாக்கி என்றும் கூறியுள்ளார்.

மாலை முரசு செய்தி குழு

தேர்தல் ஆணையத்தில் இணை ஆணையர்களுக்குத் தெரியாமல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக நடவடிக்கைகள் மேற்கொண்டதாக செய்தி வெளியானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக SIR நடவடிக்கைகள் நேர்மையாக மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஏனென்றால் SIR நடவடிக்கைக்குப் பிறகு தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள், குறிப்பாக ஸ்டாலின், மம்தா பேனர்ஜி தலைவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

இதனால் இந்த மாநிலங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற குரல் எழுந்தது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஞானேஷ் குமார் பதவி விலக கோரி அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். குறிப்பாக மும்பையில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த உள்ளதாகக் கூறியிருக்கின்றனர்.

இந்த நிலையில் தவெக அமைச்சர் ராஜ்மோகன், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனப் போராட்டம் நடத்துவது திசைத் திருப்பும் முயற்சி எனப் பேசியது கவனம் பெற்றது.

நேற்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்மோகன், "தமிழக வெற்றிக் கழகம் என்ற SIR முழு செயல்பாட்டையுமே எதிர்க்கிறது. முன்னதாக தலைவர் வெளியிட்ட அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறார்.

வெறும் ஆணையராக மாற்றுவாதனால் இது முடிந்துவிடாது.

ஒரு சுதந்திரமான நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும் என்றால் இந்த முறையில் மிகப் பெரிய மாற்றம் வேண்டும். தனி நபர்களை மாற்றுவது திசைத் திருப்பும் அரசியல். தமிழக வெற்றிக் கழகம் அதற்கு விழாது" எனப் பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்த காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம், "வாயைத் திறந்து உங்கள் அறியாமையை வெளிப்படுத்துவதை விட, சில சமயங்களில் அமைதியாக இருப்பதே சிறந்தது." என பதிலளித்திருந்தார்.

மேலும் தமிழக காங்கிரஸ் சமூக ஊடக பொறுப்பாளர் கே.டி. லட்சுமி காந்தன், "பள்ளிச் கல்வித் துறை அமைச்சர் எந்த புரிதலும் இல்லாமல் பேசுகிறார். மூன்று தேர்தல் ஆணையர்களின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருக்கக்கூடிய ஞானேஷ்குமார் மீதமுள்ள ரெண்டு தேர்தல் ஆணையர்களின் ஆட்சேபங்களை அலட்சியப்படுத்திவிட்டு பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். அதன் மூலமாக சட்ட விதி மீறல்கள் நடைபெற்றுள்ளது. அதற்கு முழு பொறுப்பு தலைமை தேர்தல் அதிகாரியான ஞானேஷ் குமார் தான். ஏற்கனவே வாக்குத்திருட்டை பற்றி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பலமுறை பல ஆதாரங்களை எடுத்து மக்களிடையே அம்பலப்படுத்தி இருக்கிறார். இருப்பினும் மோடி அமித்ஷா ஆகியோரின் அடியாளாக ஞானேஷ் குமார் தொடர்ந்து செயல்பட்டு வருவது இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து அவர் அந்த பதிவில் நீடிக்க கூடாது என்பதுதான் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. ஞானேஷ் குமார் செய்யும் திருட்டுத்தனங்களை ஆதாரங்களோடு தலைவர் ராகுல் காந்தியும் மூத்த செய்தி நிறுவனங்களும் அம்பலப்படுத்திய பிறகும் அமைச்சர் ராஜ்மோகன் இப்படி பேசுவது சரியல்ல முறையல்ல ஜனநாயகத்தை காக்க வேண்டிய பொறுப்பு தமிழக வெற்றி கழகத்திற்கும் உண்டு என்பதை உணர்ந்து பேச வேண்டும். ஞானேஷ் குமார் பதவியில் இருக்கும் வரை இந்திய ஜனநாயகத்திற்கு இந்திய தேர்தல் நடைமுறைக்கு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஆபத்து." எனப் பதிவீட்டிருந்தார்.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ராஜ் மோகன் தான் SIR குறித்த கருத்தை காங்கிரசைப் பொறுத்து சொல்ல வில்லை என்றும் காங்கிரஸ் தவெக இரண்டும் இரண்டு குழல் துப்பாக்கி என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், "SIR- மட்டும் இல்லையென்றால் இன்னும் நிறைய ராஜ்மோகன்கள் வந்திருப்பாங்க. தவெக தனிப் பெரும்பான்மை கட்சியாக வளர்ந்திருக்கும்" என்றார். ஆனால் ஞானேஷ் குமார் பதவி விலகல் போராட்டம் குறித்து நிலைப்பாட்டை மாற்றியதாக தெரிவிக்கவில்லை.

SIR செயல்பாட்டை எதிர்க்கும் தவெக, ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்