ஜெயிலர் 2 படப்பிடிப்பை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘தர்மன்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அதற்காக ஹைதராபாத் செல்லும் போது விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார்.
சினிமா அப்டேட்டுகள் பற்றி பேசுகையில், “ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தர்மன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் படத்தைத் தயாரிக்கிறார். நானும் கமல்ஹாசனும் ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் படத்தில் ஒன்றாக நடிக்க உள்ளோம்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, “தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜயின் 100 நாள் ஆட்சி எப்படி உள்ளது?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்காமல் ரஜினிகாந்த், “தேங்க் யூ... தேங்க் யூ...” என்று கூறிவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். பின்னர் விஜய் முதலமைச்சரானபோது, ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விமர்சனங்களுக்கு முடிவுகட்டும் விதமாக, தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அப்போது, “புதிய அரசின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அதனை நிச்சயம் பூர்த்தி செய்வார்கள் என நம்புகிறேன். ஒரு, இரண்டு வருடங்களுக்கு அவரை வேலை செய்ய மக்கள் விட்டுவிட வேண்டும். அவகாசம் தர வேண்டும். மற்றொன்று, அவருடைய தொண்டர்களாகட்டும், ரசிகர்களாகட்டும், ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். அதாவது, நாம் தவறு செய்தால்கூட அது நேராக விஜயைத்தான் பாதிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்” எனப் பேசியிருந்தார்.
ஏற்கெனவே விஜய்க்கு 2 ஆண்டுகள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்ததால், அதன் பொருட்டே அரசின் மீது எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு, லதா ரஜினிகாந்திடம் அரசின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவரும், “நானும் மக்களில் ஒருவராக இந்த ஆட்சியைப் பார்க்கிறேன். 30 நாட்கள் தானே ஆகியிருக்கிறது. இப்போதே எதுவும் சொல்லிவிட முடியாது” என இதே கருத்தைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.