காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் சமூகப் பணி இரண்டாம் ஆண்டு படிக்கும் மூன்று மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. காரணம் அவர்கள் விடுதியின் சுவர்களில் “ஜெய் பீம்” என்றும் “சுதந்திர பாலஸ்தீனம்” என எழுதியிருக்கின்றனர்.
இந்த வாக்கியங்களை எழுதியது தேச விரோதமான செயல்கள் என்றும், விடுதியின் சுவர்களை சேதப்படுத்தி விட்டார்கள் என்றும் கூறி அஸ்லம், சயீத், நஹல் இப்னு என்ற மூன்று மாணவர்களை தேர்வு நடப்பதற்கு ஒரு நாள் முன்பாக கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் “இவ்வாறு எழுதப்பட்டிருந்தது விடுதியின் இரண்டாவது மாடியில் உள்ள சில அறைகளில் தான், எங்கள் அறைகளில் இல்லை. நாங்கள் எங்கள் பாடத்திட்டத்தின் களப்பணிகளுக்கு பயன்படுத்த வைத்திருந்த கலர் சாக்பீஸ் மாற்றும் மற்ற பொருட்களை வைத்து எங்களை குற்றவாளி என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்கிறார்கள்.
நிறுவனத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட உதவி பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தியதற்காக, மாணவர் மன்ற உறுப்பினர் அஸ்லாமை குறிவைத்தே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. என மாணவர்கள் குற்றச்சாட்டு வைத்திருக்கின்றனர்.
கல்லூரி நிர்வாகத்தில் இந்த செயலை எதிர்த்தும், இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாகவும் கல்லூரி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பலரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தனது வலைதள பக்கத்தில் பதிவுகளை வெயிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது வலைதள பக்கத்தில் “ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனிய காசா மண்ணில், இஸ்ரேலிய கொடும்படைகள் நடத்தும் மனித வேட்டை இந்த நூற்றாண்டில் நடைபெறும். ஈழத்திற்கு பிறகு இன்னுமொரு மிகப்பெரிய இனவழிப்பாகும். அன்று ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதை வேடிக்கைபார்த்து துணைநின்ற உலக நாடுகள் இன்று பாலஸ்தீன படுகொலையை வேடிக்கை பார்த்து அமைதி காக்கிறது.
ஜெய் பீம் என்ற சொல் எப்படி இந்த நாட்டிற்கு எதிரானது? அரபு நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பியாவின் பல நாடுகள், ஏன் அமெரிக்காவிலும்கூட பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் மாணவர்கள் பெருந்திரளாக கைகளில் பதாகை ஏந்தி பேரணி, ஆர்ப்பாட்டம் மூலம் தங்களின் மனக்கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். தினம் தினம் கொல்லப்படும் பாலஸ்தீன மக்களுக்காக நடைபெறும் அறப்போராட்டங்களுக்கு உலக நாடுகள் பலவும் அனுமதி அளிக்கும் நிலையில்.
உலகின் மிகப்பெரிய சனநாயக நாடான இந்தியா மாணவர்களை போராட அனுமதிக்க மறுப்பதோடு, அவர்களின் கருத்துரிமையையும் மறுத்து, குரல்வளையை நெரித்து, கருத்து தெரிவிப்பதையே பெருங்குற்றமாக கருதி தண்டனை அளிப்பது கொடுங்கோன்மை ஆகும். மூன்று மாணவர்களும் இஸ்லாமியர்கள் என்பதாலேயே தேர்வு நேரம் என்றும் பாராமல் இத்தகைய கடுமையான தண்டனை இந்திய ஒன்றிய அரசின் கீழ்வரும் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்